“50 வருஷமா ராசியே இல்ல”… இம்முறையாவது பாபநாசம் திமுகவின் கோட்டையாகுமா..? போர்க்கொடி தூக்கும் உடன்பிறப்புகள்…!!! 

Estimated read time 1 min read

வருகின்ற 2026 சட்டப்பேரவைத் தேர்தலில், தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கியத் தொகுதிகளில் ஒன்றான பாபநாசத்தில், உதயசூரியன் சின்னத்தில் திமுக வேட்பாளரே நேரடியாகக் களமிறங்க வேண்டும் என அக்கட்சியினர் இடையே கோரிக்கை பலமாக எழுந்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளாக இத்தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்ற வரலாறு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் பாபநாசம் தொகுதி மனிதநேய மக்கள் கட்சிக்கு (மமக) ஒதுக்கப்பட்டது. அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நடைபெறவுள்ள தேர்தலிலும் இத்தொகுதியைத் மீண்டும் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என மமக தலைமை வலியுறுத்தி வருகிறது. இருப்பினும், இம்முறை உதயசூரியன் சின்னத்தில் கூட்டணி கட்சி வேட்பாளரை நிறுத்தாமல், திமுகவின் சொந்த வேட்பாளரையே நிறுத்த வேண்டும் என உடன்பிறப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

அதாவது பாபநாசம் தொகுதியின் தேர்தல் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், 1952 முதல் 1967 வரை காங்கிரஸ் கோட்டையாகத் திகழ்ந்தது. 1971-ம் ஆண்டு தேர்தலில் திமுக வேட்பாளர் கணபதி வெற்றி பெற்றார். அதுவே இத்தொகுதியில் திமுக வேட்பாளர் பெற்ற கடைசி வெற்றியாகும். அதன்பிறகு 1977 முதல் 1991 வரை காங்கிரஸ் கட்சியே இங்கு வெற்றி பெற்றது. 1989-ல் மூத்த தலைவர் ஜி.கே.மூப்பனார் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடினார்.

பின்னர் 1996 மற்றும் 2001-ல் தமிழ் மாநில காங்கிரஸ் வெற்றி பெற்றது. 2006, 2011, 2016 ஆகிய தேர்தல்களில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்ட போதிலும், அதிமுகவே வெற்றியைத் தக்கவைத்துக் கொண்டது. கடந்த முறை உதயசூரியன் சின்னம் வெற்றி பெற்றிருந்தாலும், வெற்றி பெற்ற வேட்பாளர் திமுகவைச் சேர்ந்தவர் இல்லை என்பதால், 50 ஆண்டுகாலத் தாகத்தைத் தீர்க்க இம்முறை திமுகவே நேரடியாகக் களம் காண வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பமாக உள்ளது. திமுக நேரடியாகப் போட்டியிட்டால் வெற்றி உறுதி என அக்கட்சியினர் தலைமைக்கு நம்பிக்கையூட்டி வருகின்றனர்.

தஞ்சை மாவட்ட அரசியல் சதுரங்கத்தில் பாபநாசம் தொகுதி யாருக்கு ஒதுக்கப்படும்? 50 ஆண்டுகால ஏக்கத்திற்கு திமுக தலைமை முற்றுப்புள்ளி வைக்குமா? என்பது தேர்தல் அறிவிப்பின் போது தெரியவரும்.

Please follow and like us:

You May Also Like

More From Author