தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி (தவாக) போட்டியிடாது என்று அக்கட்சியின் தலைவர் டி.வேல்முருகன் அதிரடியாக அறிவித்துள்ளார்.
திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருந்த வேல்முருகன், அண்மையில் அதிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, தவாக தலைமையில் சில சிறிய அமைப்புகளை ஒருங்கிணைத்து தனி அணியாகத் தேர்தலைச் சந்திக்கப் போவதாகத் திட்டமிட்டிருந்தார்.
தனி அணி அமைக்கும் பணிகளில் அக்கட்சியினர் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தேர்தலில் போட்டியிடும் முடிவிலிருந்து திடீரென பின்வாங்குவதாக வேல்முருகன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் வியூகங்களை வகுத்து வந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், தலைவரின் இந்தத் திடீர் முடிவால் மிகுந்த அதிர்ச்சியிலும் ஏமாற்றத்திலும் ஆழ்ந்துள்ளனர். இதேபோன்று நடிகர் கமல்ஹாசனும் திமுக கூட்டணியில் குறைவான சீட் கிடைத்ததாலும் அதே நேரத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு கூறியதாலும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் முன்னதாக அறிவித்தார்.
அதே நேரத்தில் மநீம கட்சி திமுகவுக்கு சட்டமன்ற தேர்தலில் ஆதரவு வழங்கும் என்றும் அறிவித்திருந்தார். மேலும் இதனைத் தொடர்ந்து தற்போது திமுக கூட்டணியில் இருந்து விலகிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது.
