தென்கொரியாவைத் தனது நாட்டின் “முதன்மை எதிரி” என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் நடைபெற்ற வடகொரிய நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசிய அவர், தென்கொரியாவுடன் இனி அமைதிப் பேச்சுவார்த்தைக்கோ அல்லது இரு நாடுகளும் இணைவதற்கோ வாய்ப்பில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதற்கேற்ப வடகொரியாவின் அரசியலமைப்பில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதோடு, தென்கொரியாவை ஒரு தனி நாடாகவும், நிரந்தரப் பகை நாடாகவும் கருதும் வகையில் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அணு ஆயுதக் கொள்கையில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளப் போவதில்லை என்று கூறிய கிம் ஜாங் அன், தனது நாட்டின் அணு ஆயுத அந்தஸ்தை எக்காரணம் கொண்டும் கைவிட முடியாது என எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் அழுத்தம் கொடுத்த போதிலும், தற்காப்பு மற்றும் தாக்குதல் திறனை வலுப்படுத்துவதில் வடகொரியா உறுதியாக இருப்பதை இந்த அறிவிப்பு காட்டுகிறது.
கொரிய தீபகற்பத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலை இந்த அதிரடி முடிவு மேலும் சிக்கலாக்கியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
