ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதாக ஈரான் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை 27ஆம் நாள் அறிவித்துள்ளதோடு, ஈரான் மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் சீன ஊடக குழுமத்தின் சிஜிடிஎன் ஊடகம் உலகளாவிய கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. இதில், அமெரிக்காவின் வெளிநாட்டுத் தலையீடு பயனளிக்காது என்றும், ஈரானுடனான மோதலால் அது சர்வதேச சமூகத்தில் மேலும் தனிமைப்படுத்தப்படும் என்றும் 89.6 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடங்கியது முதல், ஈரானில் 1,700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 22,800 பேர் காயமடைந்துள்ளனர், சுமார் 35 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று சர்வதேச கடல்சார் அமைப்பிற்கான ஈரானின் துணை நிரந்தரப் பிரதிநிதி பூரியா கோலிவந்த் தெரிவித்தார். இது குறித்து, அமெரிக்க-இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் சர்வதேசச் சட்டத்தையும் சர்வதேச உறவுகளின் அடிப்படை நெறிமுறைகளையும் மீறியுள்ளன என்று 92.4 விழுக்காட்டினர் கண்டித்துள்ளனர். மோதலின் தொடக்கத்தில், பேச்சுவார்த்தைக்குத் தயாராகும் வேளையில் இராணுவ நடவடிக்கைகளை நடத்திய அமெரிக்காவின் செயல் அதிகபட்ச அழுத்தத்தை வெளிப்படுத்தியது. தற்போது அத்தகைய செயலை அது மீண்டும் செய்கிறது. அமெரிக்கா 15 நிபந்தனைகள் மூலம் மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் திட்டத்தை ஈரானுக்கு முன்வைத்த வேளையில், ஆயிரக்கணக்கான கடற்படை வீரர்களை மத்திய கிழக்கிற்கு அனுப்பும் பணியை விரைவுபடுத்துகிறது. இது அப்பட்டமான அச்சுறுத்தல் என்றும், மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் அடிப்படையான நல்லெண்ணம் கூட இல்லை என்றும் 88 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
சர்வதேசப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குப் படைபலம் ஒருபோதும் சரியான வழி அல்ல, அது வெறுப்பையும் முரண்பாட்டையும் தீவிரப்படுத்தும் என்பதை 65 விழுக்காட்டினர் ஏற்றுக்கொண்டனர். போர்நிறுத்தமே மிகவும் அவசரமான பணி என்றும், போரில் ஈடுபடும் அனைத்து தரப்புகளும் பதற்றத்தை தீவிரப்படுத்தும் எந்த வார்த்தைகளையும் செயல்களையும் தவிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் இணக்க முயற்சிகளை ஆக்கப்பூர்வமாக ஊக்குவித்து வருகின்றன என்பதை 72.3 விழுக்காட்டினர் பாராட்டினர். இது சம்பந்தப்பட்ட நாடுகளின் நலன்களுக்கு உகந்தது என்றும், சர்வதேச சமூகத்தின் பொதுவான விருப்பங்களை காட்டியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
