மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
துபாயில் மறைந்திருந்த அமெரிக்க ராணுவத்தின் இரண்டு ரகசியத் தளங்கள் மீது ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி, பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஈரானின் புரட்சிகர காவல் படையின் (IRGC) செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் இப்ராஹிம் ஜோல்பகாரி இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
“பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் நடத்திய முந்தைய தாக்குதல்களுக்குப் பயந்து, அமெரிக்க வீரர்கள் துபாயில் உள்ள இரண்டு ரகசிய இடங்களுக்குத் தப்பியோடி ஒளிந்திருந்தனர்.
முதல் மறைவிடத்தில் 400 வீரர்களும், இரண்டாவது இடத்தில் 100 வீரர்களும் என மொத்தம் 500-க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்தனர். அந்த இடங்களைத் துல்லியமாகக் கண்டறிந்து, ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தரைமட்டமாக்கினோம்.
இந்தத் தாக்குதலில் அமெரிக்கத் தரப்பில் கடுமையான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ள ஈரான், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ராணுவத் தளபதிகளுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
“இந்தப் பிராந்தியம் அமெரிக்க வீரர்களின் சவப்பெட்டியாக மாறும் என்பதை அவர்கள் உணர வேண்டும். இஸ்லாமிய வீரர்களின் விருப்பத்திற்குப் பணிவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை” என்று ஈரான் தெரிவித்துள்ளது.
நேற்று அபுதாபியின் கலீஃபா பொருளாதார மண்டலம் மற்றும் சவுதி அரேபியாவின் பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளம் ஆகியவற்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, தற்போது துபாயிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஈரான் கூறுவது வளைகுடா நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்தத் தாக்குதல் மற்றும் உயிரிழப்புகள் குறித்து அமெரிக்க ராணுவம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.
மறுபுறம், பதற்றத்தைத் தணிக்காமல் மோதலை எதிர்கொள்ள அமெரிக்கா தயாராகி வருகிறது. சுமார் 3,500 கூடுதல் அமெரிக்க வீரர்கள் போர்க்கப்பல்கள் மூலம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஈரான் எல்லையில் குவிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்குப் பதிலடி கொடுத்துள்ள ஈரான், “அமெரிக்க வீரர்கள் ஈரான் மண்ணில் கால் வைத்தால், அவர்கள் சவப்பெட்டிகளில் தான் நாடு திரும்புவார்கள்” எனப் பகிரங்கமாக எச்சரித்துள்ளது.
மேலும் ஈரானின் முக்கிய பத்திரிக்கையில் வெளிவந்துள்ள செய்திகள் நரகத்திற்கு நல்வரவு ஈரான் மண்ணில் கால் வைக்கும் எந்த ஒரு அமெரிக்க வீரரும் சவப்பெட்டியில் தான் செல்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
