தைவானில் அடுத்தடுத்து 80-க்கும் மேற்பட்ட முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
கிழக்கு ஆசியாவில் உள்ள தைவான் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், தைவானில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை 80-க்கும் மேற்பட்ட முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால், மக்கள் பீதியடைந்தனர்.
அதிகபட்சமாக ரிக்டர் அளவுகோலில் 6.3 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், தலைநகர் தைபே உள்ளிட்ட இடங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் உயரமான கட்டிடங்களில் இருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வீதிகளில் ஓடி தஞ்சமடைந்தனர். ஹூலைன் மாகாணத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை. சில இடங்களில் மட்டும் கட்டிடங்கள் லேசான சேதமடைந்திருப்பதாகவும். உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தைவான் அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.