பாகிஸ்தானில் நடைபெற்ற ஈரான் – அமெரிக்கா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கும் நாடுகள் மீது 50 சதவீத சுங்க வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குறிப்பாகச் சீனாவைக் குறிவைத்து இந்த மிரட்டலை விடுத்துள்ள டிரம்ப், ஈரானுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகளைச் சீனா விநியோகிப்பதாகத் தனக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும், இதைக் கண்டறிந்தால் கடுமையான பொருளாதார அபராதத்தைச் சீனா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் மின்சாரக் கட்டமைப்பைச் சிதைத்து அந்நாட்டை 10 ஆண்டுகளுக்கு இருளில் மூழ்கடிக்கப்போவதாக மிரட்டியுள்ள டிரம்ப், சீனாவுக்கான கச்சா எண்ணெய் தேவையை ஈடுகட்ட அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிலிருந்து எண்ணெய் வழங்கத் தயாராக இருப்பதாகவும் ஒரு ‘ஆஃபரை’ முன்வைத்துள்ளார்.
அடுத்த மாதம் அதிபர் ஷி ஜின்பிங்கைச் சந்திக்க டிரம்ப் சீனா செல்லவிருக்கும் நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் விடுக்கப்பட்டுள்ள இந்த அச்சுறுத்தல் உலக வர்த்தகச் சந்தையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
