தமிழகத்தில் இருந்து அடுத்த மாதம் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆறு இடங்களுக்கான தேர்தலில், தி.மு.க மூன்றிலும், மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்திலும் போட்டியிடுகிறது. அதன்படி தி.மு.க சார்பில், தற்போதைய எம்.பி.வில்சன், கவிஞர் சல்மா, முன்னாள் எம்.எல்.ஏ சிவலிங்கம் ஆகியோரும், மக்கள் நீதி மய்யம் சார்பில், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகின்றனர். கடந்த ஜூன் 6ம் தேதி முதலமைச்சர் , துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் , கூட்டணி கட்சித் தலைவர்கள் வைகோ, திருமாவளவன், செல்வப்பெருந்தகை மற்றும் டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அலுவலகத்தில் 4 பேரும் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
அதேபோல் அ.தி.மு.க சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க அவைத் தலைவர் தனபால் ஆகியோரும் தங்களது வேட்பு மனுக்களை, கடந்த ஜூன் 6ம் தேதி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அலுவலகத்தில் மனுதாக்கல் செய்தனர். இதேபோல் சுயேட்சைகள் 7 பேர் என மொத்தம் 13 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். நேற்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவுபெற்றது.
இந்நிலையில் இன்று தேர்தல் நடத்தும் அதிகாரி சுப்பிரமணியம் தலைமையில் வேட்பு மனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. 10 எம்.எல்.ஏக்களின் முன்மொழிவு இல்லையென்றால் வேட்புமனு நிராகரிக்கப்படும். அதன்படி எம்.எல்.ஏக்களின் கையெழுத்து இல்லாத சுயேட்சைகள் 7 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. திமுக வேட்பாளர்கள் எம்.பி.வில்சன், கவிஞர் சல்மா, முன்னாள் எம்.எல்.ஏ சிவலிங்கம் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோரது மனுக்களும், அதிமுக வேட்பாளர்கள் இன்பதுரை, தனபால் ஆகியோரது மனுக்களும் ஏற்கப்பட்டது. மொத்தமே 6 இடங்கள் மட்டுமே காலியாக உள்ள நிலையில் திமுக கூட்டணி மற்றும் அதிமுக வேட்பாளார்கள் அனைவரும் போட்டியின்றி தேர்வாகின்றனர். நாளை மறுநாள் (12ம் தேதி) பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்பப்பெற அவகாசம் உள்ளது.