தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளத்தில் கசிந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், இந்தப் பிரச்சனை குறித்து அதிரடியான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதனால் மத்திய இணை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான எல். முருகன் தான் இந்தத் திரைப்படம் இணையதளத்தில் லீக் ஆனதற்கு முழு முதற்காரணம் என்றும், இதற்கு அவரே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், நடிகர் விஜய் பாஜகவின் எந்தவொரு அழுத்தத்திற்கும் பணியக்கூடியவர் அல்ல என்றும், சிங்கம் எப்போதும் தனித்தே வரும் என்பது போல விஜய் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி மலரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், அதிமுகவின் தற்போதைய நிலைக்கு எடப்பாடி பழனிசாமியே காரணம் என்று விமர்சித்த அவர், தமிழக வெற்றிக் கழகம் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் கட்சியாகத் திகழும் என்றும் கூறினார்.
தேர்தல் நெருங்கும் வேளையில், ஒரு முக்கியத் திரைப்படம் கசிந்ததற்கு மத்திய அமைச்சரே காரணம் என செங்கோட்டையன் கூறியிருப்பது தற்பொழுது தமிழக அரசியலில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
