சென்னை : தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) தொடர்பாக ஒன்றிய பாஜக அரசு கொண்டு வரும் அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று வெளியிட்ட வீடியோ செய்தியில் ஸ்டாலின் பேசியதாவது“வணக்கம். தமிழ்நாட்டின் வாசல் வரை வந்துட்ட பேராபத்தைப் பற்றி நேற்று நான் வீடியோவில் சொல்லியிருந்தேன். Delimitation என்கிற பெயரில் தனது எல்லையைத் தாண்டி பாஜக அரசு தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கிறது.
வட மாநிலங்களுக்கு அரசியல் வலிமையை மேலும் வாரி வழங்குகிற மாதிரியோ, தென் மாநிலங்கள் அரசியல் வலிமையை இழப்பது மாதிரியோ நடந்தால் தமிழ்நாடு பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. ஒவ்வொரு குடும்பமும் தெருவுக்கு வந்து போராடும் என்று சொல்லியிருந்தேன்.யார் நல்லது சொன்னாலும் கேட்காத ஒன்றிய பாஜக அரசு இதையும் கேட்காது. சட்டத் திருத்தம் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் குரலை ஒடுக்கப் பார்க்கிறார்கள்.
நாளைக்கு கொண்டு வரப்போகும் சட்டத் திருத்தத்தால் வட மாநிலத்துக்கும் தென் மாநிலத்துக்குமான உறுப்பினர்கள் எண்ணிக்கை வேறுபடும். சும்மா பெயரளவுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்குத் தொகுதி அதிகரிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு, அவர்களுக்கு சாதகமான வட மாநிலங்களுக்கு மிக மிகக் கூடுதலாக தொகுதிகள் அதிகரித்து, நம்ம தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் தேவை இல்லை என்ற நிலைமையை கொண்டு வரப் போகிறார்கள்.இதைத்தான் எங்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி என்று சொல்கிறோம்.
மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காகத் தென் மாநிலங்களுக்குத் தண்டனை ஆகிவிடுகிறது. தேச நலனுக்காக, தேச வளர்ச்சிக்காக நாங்கள் துணை நின்றால் எங்களுடைய அரசியல் உரிமையைப் பறிப்பீர்களா? இதைவிட கொடுமை என்ன இருக்க முடியும்?பிரதமர் மோடி அவர்களே, தமிழர்களையும் தென் மாநில மக்களையும் இரண்டாம் தரக் குடிமக்களாக்கப் பார்க்கிறீர்கள்.
டெல்லி பாஜகவுக்கு தமிழர்கள் யார் என்று காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது.தமிழ்நாட்டின் குரலை நெறிக்க நினைக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நாளைக்கு நாடாளுமன்றத்தில் அவர்கள் கொண்டு வரப்போகும் சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பை காட்டும் வகையில் தமிழ்நாட்டில் எல்லாரும் நம்ம வீடுகளில் கருப்புக் கொடியை ஏற்றுவோம்.
கருப்புச் சட்டத்துக்கு எதிராக நம்ம எதிர்ப்பின் அடையாளமாக கருப்புக் கொடியை ஏற்றுவோம்.இந்தியாவை இருண்ட காலத்திற்கு அழைத்துச் செல்லும் எதேச்சாதிகார பாஜக அரசுக்கு எதிராக கருப்புக் கொடி ஏற்றுவோம். இது தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்குமான தேர்தல் என்று நான் சொன்னதை பாஜக தொடர்ந்து நிரூபிக்கிறது.நான் சொன்னதோடு உண்மையான அர்த்தத்தை பாஜகவே உணர்ந்துவிட்டது. அவர்களுக்கு தமிழ்நாடு முன்னிலையில் இருக்கக் கூடாது.
தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களின் குரல் கூட நாடாளுமன்றத்தில் ஒலிக்கக் கூடாது. அதற்கான சதித் திட்டத்தை சட்டமாகவே கொண்டு வருகிறார்கள். சதியை எப்படி சட்டமாக ஏற்க முடியும்?கருப்புச் சட்டத்துக்கு எதிராக கருப்புக் கொடி ஏற்றுவோம். ஒவ்வொரு வீட்டிலும், பொது இடங்களிலும் ஏற்றுவோம்.மீண்டும் எச்சரிக்கை செய்கிறேன். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை முடிவு செய்யக்கூடாது. கருப்புச் சட்டத்தை நிறைவேற்றக்கூடாது. எட்டு கோடி தமிழர்களின் ஒற்றைக் கோரிக்கை இது.அரசியல் எல்லைகளைக் கடந்து தமிழ்நாட்டின் உரிமையைக் காக்க தமிழ்நாடு ஓங்கி ஒலிக்கட்டும். தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும். வெல்வோம் ஒன்றாக.” எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
