தேமுதிக மீண்டும் உயிர் பெறுமா?

Estimated read time 1 min read
கேப்டன் விஜயகாந்த், தேமுதிக எனும் அரசியல் கட்சியை ஆரம்பித்து 21 ஆண்டுகள் ஆகின்றன. இந்தக் கட்சியின் முதல் 10 ஆண்டுகள் பசுமையாக இருந்தது. அடுத்த 10 ஆண்டுகளில் கருகிப்போய் விட்டது.

இந்தத் தேர்தலில் கட்சியை மீண்டும் துளிர்க்க வைக்க விஜயகாந்த் மனைவியும், கட்சியின் பொதுச்செயலாளருமான பிரேமலதா பகீரத பிரயத்தனங்களில் ஈடுபட்டுள்ளார். அவரது முயற்சி வெற்றி பெறுமா? பார்க்கலாம்.
2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில்தான் தேமுதிக முதன்முறையாக களம் இறங்கியது. 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிட்டது.
விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் மட்டும் வென்றார். ஆனால் அவரது கட்சி அந்தத் தேர்தலில் கணிசமான வாக்குகளை வாங்கியது.
இதனால் 2011-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தேமுதிகவைக் கூட்டணிக்குள் இழுக்க திமுக –அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஆர்வம் காட்டின.
தங்களுடன் விஜயகாந்த் சேருவார் என காத்திருந்த கருணாநிதி, ‘பழம் நழுவி பாலில் விழும்’ என பகிரங்கமாகவே சொன்னார்.
ஆனால், அந்தத் தேர்தலில் விஜயகாந்த் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தார். 29 தொகுதிகளில் தேமுதிக வென்றது. திமுக மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார்.
‘பதவி வரும்போது பணிவு வரவேண்டும்‘ என புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பாடி இருக்கிறார். அந்த குணம் கேப்டனிடம் இல்லாமல் போய் விட்டது.
ஒரே நேரத்தில் கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் பகைத்துக் கொண்டார். விளைவு? அவரது கட்சி பிளவுபட்டது. சிலர் திமுகவில் ஐக்கியமானார்கள். சிலர் அதிமுகவில் இணைந்தனர்.
2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயகாந்தை முதலமைச்சராக முன்னிறுத்தி மக்கள் நலக் கூட்டணி எனும் மூன்றாவது அணி உருவானது. ஒரு தொகுதியிலும் அந்த அணி ஜெயிக்கவில்லை.
உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த், டெபாசிட் இழந்தார். மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு, 34,447 வாக்குகள் மட்டுமே பெற்று, முதன் முதலாக தோல்வியைச் சந்தித்தார்.
விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்ட சூழலில் அவரது மனைவி பிரேமலதா, கட்சியைக் கையில் எடுத்துக்கொண்டார்.
கடந்த 10 ஆண்டுகளாக, மக்களவைத் தேர்தல், சட்டசபைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என தொடர் தோல்விகளை அந்தக் கட்சி சந்தித்து வருகிறது.
‘வாழ்வா..? சாவா? எனும் நெருக்கடியான நிலையில் இந்தத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது தேமுதிக.
10 தொகுதிகளில் களம் காண்கிறது. பிரேமலதா விருத்தாச்சலத்திலும், அவர் மகன் விஜய பிரபாகரன் விருதுநகரிலும் போட்டியிடுகிறார்கள்.
தங்கள் வெற்றிக்கு திமுக மட்டுமே போதும் என கருதும் பிரேமலதா, பிற கூட்டணிக் கட்சிகளை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கிறார்.
விருத்தாச்சலம் தொகுதியில், பிரேமலதா சில நாட்களுக்கு முன் பிரச்சாரம் செய்தார். எப்போதும் குரலை உயர்த்திப் பேசும் பிரேமலதா, வழக்கத்துக்கு மாறாக சோர்வுடன் காணப்பட்டார்.
அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சிலர், ‘திருமாவளவன் கடலூரில் பேசும்போது மேடையில் இருந்த பிரேமலதா அவரை மதிக்கவில்லை, எழுந்து நிற்கவில்லை’ என்று கோஷம் எழுப்பினர். பிரேமலதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
தேமுதிக போட்டியிடும் பிற தொகுதிகளிலும், அந்தக் கட்சிக்கு விசிகவினர் ஒத்துழைப்பு அளிப்பதில்லை என தகவல்.
1 % வாக்கு வங்கியுள்ள தேமுதிகவுக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டது, திமுகவின் தோழமைக் கட்சிகளை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ள நிலையில், பிரேமலதா தனது கட்சியை உயிர் பெறச் செய்வாரா என்பது தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரே தெரியவரும்.
– பாப்பாங்குளம் பாரதி.

Please follow and like us:

You May Also Like

More From Author