காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ்காரரை சுட்டுக்கொன்ற பயங்கரவாதி…

Estimated read time 1 min read

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் நகரில் உள்ள லால் சௌக் பகுதியில், அமர்நாத் யாத்திரை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் பட்டப்பகலில் பயங்கரவாதியால் மிக அருகிலிருந்து சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ பதிலடி நடவடிக்கைக்குப் பின் பள்ளத்தாக்கில் நடந்துள்ள மிக முக்கியத் தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. இந்தத் துணிகரத் தாக்குதலின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகியுள்ளன.

நேற்று மதியம் 12:30 மணியளவில் பரபரப்பான லால் சௌக் சந்தைப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் பணியில் இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த பயங்கரவாதி ஒருவன் மிகவும் நிதானமாக நடந்து வந்து, துப்பாக்கியால் மிக நெருக்கமான தூரத்தில் காவலரைச் சுட்டுவிட்டு மின்னல் வேகத்தில் தப்பியோடினான். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த புத்காம் மாவட்டத்தைச் சேர்ந்த, இந்திய ரிசர்வ் படையின் கான்ஸ்டபிள் ஆஷிக் ஹுசைன் குரேஷி (35), அனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தக் கொடூரத் தாக்குதலுக்குப் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட்’ சமூக வலைத்தளத்தில் பொறுப்பேற்றுள்ளது. தாக்குதல் நடந்த அடுத்த சில நிமிடங்களிலேயே அனந்த்நாக் ஒட்டுமொத்தப் பகுதியையும் பாதுகாப்புப் படையினர் தங்களது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தப்பியோடிய பயங்கரவாதியைப் பிடிக்கக் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு, பிரதான சாலைகளில் தீவிர வாகன சோதனையும், தேடுதல் வேட்டையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலைத் தனி ஒருவன் நடத்தினானா அல்லது இதற்குப் பின்னணியில் பெரிய பயங்கரவாத நெட்வொர்க் உள்ளதா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது அமர்நாத் யாத்திரை நடைபெற்று வரும் சூழலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த நிலையிலும் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இதற்கு ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்குத் தனது இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், “இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு நமது அரசு ஒருபோதும் பயந்துவிடாது; மனிதநேயத்திற்கு எதிரான இச்செயல்களுக்கு அஞ்சாமல், பயங்கரவாதத்தை ஒடுக்க உறுதியுடன் செயல்படுவோம்” என்று செய்தியாளர்களிடம் ஆவேசமாகத் தெரிவித்தார். இதற்கிடையே, தாக்குதலின் கொடூரமான சிசிடிவி காட்சிகளைச் சமூக வலைத்தளங்களில் யாரும் பரப்ப வேண்டாம் என்றும் மீறினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.

You May Also Like

More From Author