தவெக மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.நாமக்கல்லில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் ஈடுபட்டபோது தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக வழக்குப்பதிவு. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சதீஷ்குமார் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட்டு நீதிபதி என்.செந்தில்குமார் நேற்று விசாரித்தார்.
போலீசார் தரப்பில் ஆஜரான வக்கீல் சந்தோஷ், ‘காவல்துறையின் நிபந்தனைகளை முறையாக பின்பற்றுவதாக கூறி மனுதாரர் தான் அனுமதி பெற்றார். அவரது கட்சியினரின் செயல்பாடுகளால் 5 லட்சம் ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக மேலும் 8 வழக்குகள் மனுதாரருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார். மேலும், சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்பட ஆதாரங்களையும் அவர் தாக்கல் செய்தார்.
இந்த புகைப்படங்களை பார்த்த நீதிபதி, ‘கட்சியினர் அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், எதுவும் தெரியாது என மனுதாரர் எப்படி கூறலாம்?. கட்சியினரை கட்டுப்படுத்த தெரியாதா?. பொறுப்புடன் செயல்பட வேண்டாமா?’ என சரமாரியாக கேள்வி எழுப்பினார். பின்னர், முன்ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.
இதனிடையே தவெகவின் நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ் குமார் தலைமறைவானார். இந்நிலையில் அவரை கைது செய்ய காவல் ஆய்வாளர் கபிலன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.