
அணு ஆயுதத் தயாரிப்பு மற்றும் ஹார்முஸ் கடல்வழிப் பாதை விவகாரத்தில் அமெரிக்கா – ஈரான் இடையே நிலவும் மோதல் முற்றியுள்ள நிலையில், ஈரானின் எண்ணெய் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.
ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டலை முழுமையாகக் கைவிட வேண்டும் மற்றும் சர்வதேச வர்த்தகத்திற்கு முக்கியத்துவமான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் தனது ஆதிக்கத்தைத் தளர்த்த வேண்டும் என்பது அமெரிக்காவின் பிரதான நிபந்தனைகளாக உள்ளன. இதனை ஏற்க ஈரான் பிடிவாதமாக மறுத்து வருவதால், போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் பெரும் இழுபறி நீடிக்கிறது. இதற்கிடையே, ஈரான் துறைமுகங்களைச் சுற்றி அமெரிக்கக் கடற்படை முற்றுகை இட முயற்சித்து வருவதால் அரேபிய கடல் பகுதியில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
பிரபல செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த அதிபர் டிரம்ப், ஈரானுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது, ஈரான் எங்களது நிபந்தனைகளை ஏற்று ஒப்பந்தத்திற்கு வராவிட்டால், அவர்களது எண்ணெய் குழாய்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் வெடித்துச் சிதறும். எண்ணெய் கிணறுகளில் இருந்து கொள்கலன்களுக்கோ அல்லது கப்பல்களுக்கோ எண்ணெய்யை நிரப்ப முடியாத நிலை ஏற்படும். ஒருமுறை இது வெடித்தால், அதனை மீண்டும் முன்பிருந்த நிலைக்குக் கொண்டு வருவது சாத்தியமற்றது. ஈரான் தலைமை பேச்சுவார்த்தைக்கு விரும்பினால் எங்களை அழைக்கலாம்.
அதிபர் டிரம்பின் இந்த மிரட்டலுக்கு ஈரான் தரப்பிலிருந்து ஆவேசமான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. ஈரானிய எரிசக்தி மேம்படுத்தல் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் சகப் எஸ்பஹானி தனது எக்ஸ் (X) பக்கத்தில் வெளியிட்ட பதிவில், எங்கள் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவளிக்கும் நாடுகளின் (வளைகுடா நாடுகள்) உள்கட்டமைப்புகள் மீது நான்கு மடங்கு தாக்குதல் நடத்துவோம். எங்கள் கணிதம் மிகவும் தெளிவானது: 1 எண்ணெய் கிணறு = 4 எண்ணெய் கிணறுகள்.” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, பாகிஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை ரஷ்யா சென்றடைந்தார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ரஷ்ய அதிபர் புதினை நேரில் சந்தித்துப் பேசும் அவர், போர் நிறுத்தம் மற்றும் எண்ணெய் வர்த்தகத்தை முடக்கும் அமெரிக்காவின் தந்திரங்களை முறியடிக்க ரஷ்யாவின் ஆதரவை கோரவுள்ளார். மேலும் வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இந்தப் போர் சூழல் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
