அடிப்படை மாற்றத்திற்கான பயிற்சி முகாம்!

Estimated read time 1 min read
இன்று தமிழகத்தில் எது தலையாயப் பிரச்சினை என்று வினவியபோது கூட்டத்தில் இருந்த ஒரு பெண்மணி கூறினார்,

“பள்ளியில் போதைப் பொருள்களுக்கு மாணவர்களை அடிமையாக்குவதும், போதைப்பொருள் சந்தையாகிக் கிடப்பதும், இதுவரை இல்லாத, நாம் கண்ணிடிராத பெண் மீது வன்புணர்ச்சி செய்யும் உளவியலும்,
மதுபானத்துக்கு அடிமையாகிக் கிடக்கும் ஆண்களும் பெண்களும் தான் தமிழகத்தை தலைகுனிய வைக்கிறது.
நாம் எந்த மாநிலத்தையும்விட பொருளாதாரத்தில் வளர்ந்து விட்டோம் என்று பீத்துவதில் எந்தப் பொருளும் இல்லை.
என் கணவன் வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு வரும்போது எந்த நிலையில் வருவார் என்பதை நினைக்கும்போதே வாந்தி எடுக்க வரும்.
அதேபோல் என் மகள் பள்ளிக்குச் சென்று வீடு திரும்பும்போது என்ன பாதுகாப்பு அவளுக்கு இருக்கிறது என்று எண்ணும்போது ஒவ்வொரு நாளும் எங்களுக்கு ஒரு யுகமாக இருக்கிறது” என்று.
“பள்ளிக் கல்விச் சேர்க்கையிலும் சரி, உயர்கல்விச் சேர்க்கையிலும் சரி நாம் உயர்ந்திருக்கிறோம் என்றபோது, கல்விக் கூடங்களிலிருந்து வெளிவரும் மாணவர்கள் நம்பிக்கையுடன் நாம் பெற்ற கல்வி நம் வாழ்க்கையை மேம்படுத்திவிடும் என்ற எந்த உத்தரவாதமும் இல்லாத ஒரு ஏட்டுக்கல்வி யாருக்கானது என்றே தெரியவில்லை” என்றார்.


இந்தக் கருத்தாடலைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு, ஒரு மாணவர்களுக்கான ஆளுமைத் திறன் வளர்ப்பும் பயிற்சியில் நிறைவுரையாற்ற வாய்ப்புக் கிடைத்தது.
அங்கு மாணவர்கள் மட்டும் அல்லாது அவர்களுடைய பெற்றோர்களும் கூடியிருந்தனர். நிகழ்வின் முக்கிய அம்சமாக நிகழ்ச்சி குறித்த பின்னூட்டம் மாணவர்களிடம் கேட்கப்பட்டது.
பெண்கள், ஆண்கள் என ஓடிவந்து, தான் உணர்ந்ததை, அறிந்ததை, புரிந்ததை கூச்சமின்றி, அச்சமின்றி எடுத்து வைத்தது அந்த பயிற்சியின் உன்னத விளைவாக உணர முடிந்தது.
பொதுவாக எந்த நிகழ்விலும் பின்னூட்டம் கேட்டால் உடனே பங்கேற்றவர்களில் சிலர் வந்து சிறப்பாக இருந்தது, பிரமிப்பாக இருந்தது, நல்ல உணவு, நல்ல கவனிப்பு என்று நிகழ்வு ஏற்பாட்டாளர்களை பாராட்டித் திருப்திப்படுத்துவார்கள்.
இந்த நிகழ்வு அப்படி இல்லாமல் தங்களுக்குள் நிகழ்ந்த மாற்றங்களைப் படம் பிடித்துக் காண்பித்தது.
ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் படம் பார்த்ததுபோல் இருந்தது. ஒவ்வொரு மாணவனும் மாணவியும் பேசும்போது புதுப்புது கருத்துக்களை வைத்துக் கூறியது, விளக்கியது பெற்றோர்களுக்கு பேரானந்தத்தை தந்தது.
அப்படி என்ன பேசினார்கள்?
“இந்த ஐந்து நாள் பயிற்சி என்று நாங்கள் இங்கு வந்தோம். வரும்போது 5 நாளும் நமக்கு மிகப்பெரிய நெருக்கடிக்கு ஆளாக வேண்டி இருக்கும் என்றுதான் எண்ணி இங்கு வந்தோம்.
ஆனால், இங்கு நடந்ததோ வேறு. மிகச் சுதந்திரமாக, மகிழ்ச்சியாக, அச்சமின்றி கூடி மகிழ்ந்து இருந்தது இந்த நிகழ்வின் தனிச்சிறப்பு” என்றார் ஒரு மாணவர்.
வீட்டில் தாய், தந்தையருடன்தான் வாழ்கிறோம். எதோ ஒருவகையான மன ஓட்டத்தில் பள்ளி, வீடு, படிப்பு, மார்க்கு, எந்தக் கல்லூரி, என்ன படிப்பு, என்ன வேலை என ஒரு சமூக அந்தஸ்த்துக்கான போட்டியில் ஓட வேண்டி தயாரிக்கப்பட்டு வந்தோம்.
இந்த விடுமுறையில் எங்களை ஒரு புதிய தயாரிப்புக்கு ஆளாக முனைந்தபோது பெற்றோர் இந்த பயிற்சிக்கு அனுப்பி வைத்தனர்.
அப்பொழுது அவர்கள்மேல் எனக்கு வருத்தம்தான் மேலெழுந்தது. ஆனால், இங்கு நடந்த நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துவிட்டுப் பார்க்கும்போது எங்கள் தாய் தந்தையருக்கு நன்றி சொல்ல வேண்டும்” என்று கூறியதும் அவரேதான்.


அடுத்து ஒரு மாணவர் கூறினார்,
“எங்களுக்கு மனம், உடல், ஆன்மா இவைகள் பற்றி எதுவும் தெரியாது, யாரும் எங்களிடம் இது பற்றி பேசியதும் கிடையாது.
இவைகள் பற்றி இங்கு எங்களுக்கு வகுப்பு எடுத்த குருமகான் விளக்கியது மட்டுமல்ல எங்களுக்குப் புரியவைத்தது எதோ ஒரு புது உலகில் வாழ்வதுபோல புது உணர்வு ஏற்பட்டது.
இதைவிட மிக முக்கியமாக, இவை அத்தனையும் உனக்குள் இருக்கிறது, அதைத் தேடு, அதைக் கண்டுபிடி, அதைக் கண்டுபிடித்து அவைகளைப் பக்குவப்படுத்து, அவைகளை உயர்ந்த நிலைக்குக் கொண்டுசெல்ல தொடர்ந்து முயற்சி செய்.
நீயே இறைவன் ஆகிவிடுகிறாய் என்று விளக்கி, நீ உன்னை நம்பு என்று குருமகான் கூறியது, நாம் அப்படி ஒரு மாற்றம் பெற்ற மனிதராக நாமே மாறமுடியும் என்று எங்களுடைய சிந்தனைப் போக்கை திசை திருப்பி விட்டார் குருமகான்” என்றார் அந்த மாணவர்.
அடுத்தவர் வந்தார், “எனக்கு வழிகாட்டி நான்தான், எனக்குத் தலைவன் நான் தான், நான் எவரையும் சார்ந்து வாழமாட்டேன், என் வாழ்வு என் கையில், என் தலைவிதி என் கையில், என் முன்னேற்றம் மேம்பாடு என் கையில் என்று எனக்கு நானே பொறுப்பேற்றுக் கொண்டேன்.
இந்தப் பயிற்சிக்கு வந்தபோது அடுத்த 5 நாள் நம்மை எங்கோ கொண்டு அடைக்கப் போகிறார்கள் என்ற எனக்கு, என் வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய இந்த நிகழ்வுக்கு இப்பொழுது நன்றி கூறுகிறேன்” என்றார் அந்த மாணவர்.
அடுத்து ஒரு மாணவி வந்தார்.
“எனக்கும் என் பெற்றோருக்கும் உள்ள உறவு, எனக்கும் இந்தச் சமூகத்திற்கும் உள்ள உறவு, எனக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் உள்ள உறவு என்ன என்பதை இந்த பனிரெண்டு ஆண்டுகால படிப்பில் எந்த இடத்திலும் கற்றுக் கொடுக்கவில்லை.
இந்த முகாமில் கற்றுக் கொடுத்தார்கள். அது மட்டுமல்ல, அதை எப்படி ரசித்துச் செயலில் கரைவது என்பதையும் கற்றுக் கொடுத்தார்கள்.
இந்தப் பயிற்சியை வகுப்பறையாக மாற்றாமல் இயற்கையுடன் இணைய வைத்து, ஒவ்வொன்றையும் செயல்முறையில் கற்க வைத்தது மட்டுமின்றி ஓர் புதிய உணர்வை எங்களுக்குள் ஏற்படுத்திவிட்டனர்.


எங்கள் வகுப்பு ஆசிரியர்களுக்கு மேலாக எங்களை அன்புடன் அரவணைத்து, எங்களை அன்புக் கடலில் நீந்த வைத்தனர்.
அதற்காக வழி நடத்திய அத்தனை பேருக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம்” என்றார்.
இந்த பின்னூட்டத்தைக் கூறும்போது வேறு எதாவது கற்றுக் கொண்டீர்களா என்று கேட்க, அந்த மாணவி கூறினார்,
“பாலியல் கல்வி, இங்கு கற்றுக் கொடுக்கப்பட்டது, இதுவரை அது எதோ சமூக விரோத சொல்லாகவும், வாயில் உச்சரிக்கக்கூடாத சொல்லாகவும் மட்டும் பார்த்த எங்களுக்கு,
அது அசிங்கமானதும் அல்ல, புனிதமானதும் அல்ல, அது இயல்பான அறிவியல் செயல்பாடு என்பது கற்றுக் கொடுக்கப்பட்டது, சிறப்பிலும் சிறப்பு” என்றார்.
இடைமறித்து, “இதைக் கற்றுக் கொண்டதால் உங்களுக்குப் புரிந்தது என்ன?” என்று கேட்டபோது, அந்த மாணவி கூறினார்,
“எங்களை நாங்கள் எந்த தவறுக்கும் இடம் கொடுக்காமல் பாதுகாத்துக் கொள்வோம். அதேபோல் மற்றவருக்கும் நாங்கள் எந்த வகையிலும் தொல்லைதர மாட்டோம்.
இந்தக் கல்வி எங்கள் வயதில் உள்ள அனைவருக்கும் கிடைத்தால், இன்று தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்று நாம் ஓலமிட வேண்டியதில்லை” என்றார்.
மற்றுமொரு மாணவி வந்தார். எனக்கு வீட்டில் யாரைப் பார்த்தாலும் ஒரு வெறுப்பு, அப்பா அம்மா மேல்கூட எரிச்சல் வரும்.
இந்த 5 நாளில் அந்த வெறுப்புணர்வு எங்கு சென்றது என்று தெரியவில்லை. அன்பாக இருப்பதற்கான ஒரு புது உளவியல் வந்துவிட்டது.


அப்பா அம்மா இருவரும் வந்திருக்கின்றார்கள். முதலில் அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
அடுத்து அந்த உணர்வை ஏற்படுத்திய குருமகான், ஞான ஆசிரியர்கள், சத்தியா அக்கா அனைவருக்கம் என் நன்றி” என்று கூறினார்.
இன்னொரு மாணவர் கூறினார், “இந்த ஐந்து நாட்களும், நாங்கள் காலையில் தியானத்தை மேற்கொண்டவிதம், மலை ஏறியது, நீர்வீழ்ச்சியில் குளித்தது, யோகா செய்தது, வகுப்புக்களை கவனித்தது, பிரமிட் தியானம் செய்தது என எனக்கு அனைத்தும் புதுமை.
கடைசியாக இன்றைய இறுதி நாளில் எங்கள் தலையில் குருமகான் கை வைத்து ஆசி தந்தார், அது எனக்கு எதோ ஒரு புதுவித உணர்வை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது”.
இதேபோல் பதினைந்துக்கும் மேற்பட்ட மாணவிகள் மாணவர்கள் தங்கள் உணர்வினைப் பகிர்ந்து கொண்டனர்.
ஆர்.எஸ்.மனோகர் நாடகம் பார்ப்பதுபோல் ஒருவித நம்பிக்கை உணர்வில் ஆழ்ந்தபோது என்னை நிறைவுரையாற்ற அழைத்தனர்.
சற்று விழித்துக்கொண்டு என் கருத்துக்களை அந்த மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் எடுத்து வைத்தேன்.
அரவிந்தர் கூறுவார், நாம் எங்கு எதற்காகச் சென்றாலும், நாம் செல்வது என்பது ஒரு நிகழ்வு. ஆனால் அந்த இடத்திற்கு நீ அனுப்பப்பட்டதற்கு ஒரு மூல காரணம் இருக்கும்.
அது புரிந்து சென்ற இடத்தின் மகிமை அறிந்து அங்கு செயல்பட்டுக்கொண்டு இருந்தால் எந்த நிகழ்வும் நமக்கானதாக மாறி நமக்கு அந்த நிகழ்வு வாரி வழங்கும்.


இந்த இடம் தென் கைலாயம் மனிதர்களை புனிதர்களாக்கும் ஒரு ஆன்மீக பூமி. இது எந்த மதத்தையும் சார்ந்தது அல்ல.
உனக்குள் இருக்கும் ஆற்றலை உனக்குக் காண்பிக்கும் ஒரு பயிற்சி மையம். அது இங்கு தவமாய் செய்யப்படுகிறது.
ஆகையால்தான் இது தவபூமி. இதிலிருந்து எடுத்துச் செல்ல நிறைய இருக்கின்றன. ஆனால் அதற்கான ஆத்ம சக்தி நமக்கு வேண்டும்.
இந்தக் கோவிலுக்குச் செல், இந்த பூஜை செய், இங்கே வேண்டுதல் செய் இவையெல்லாம் நடக்கும் என்று கூறாமல், உன்னை நம்பு உனக்குள் இருக்கும் ஆற்றலை நம்பு என்று உன்னை கண்டுபிடிக்க முறைமைகளை கற்றுக்கொடுத்து உனக்கு நீயே தலைவன் என்று உணர வைத்து அனுப்பும் இடம் இது.
கண்டுபிடிப்புக்களிலேயே சிறந்த கண்டுபிடிப்பு, தன்னை அறிதல். அதற்கான பயிற்சியைத்தான் இந்த ஐந்து நாளும் உங்களுக்குத் தந்துள்ளனர்.
பொதுவாக மூன்று தளங்களில்தான் ஒரு மனிதர் மாற முடியும். ஒன்று, அவரின் மனோபாவம். இரண்டு நடத்தை, மூன்று செயல்பாடுகள்.
இவை மூன்றிலும் மாற்றம் பெற ஒரு தனி மனிதனுக்கு மூன்று ஒழுக்கங்கள் தேவை. ஒன்று மன ஒழுக்கம், இரண்டு, உடல் ஒழுக்கம், மூன்று செயல் ஒழுக்கம்.
இவற்றைக் கொண்டுவர என்ன தேவையோ அதைச் செய்திருக்கின்றனர்.
இதை ஒரு செயல்வழிக் கற்றல் மூலம் செய்திருக்கின்றனர். அதுவும் உங்களை மகிழ்வித்து, மகிழ்வித்து செய்து தந்திருப்பது இந்த அமைப்பின் தனித்துவம்.
இன்றைய சூழலில் மனிதராக வாழ்வதே பெரும் சவாலாக உள்ள நேரத்தில் நான் கடவுள் நான் எனக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று கூறுவது தன்னை வித்தியாசப்படுத்திக் கொள்ளும் ஒரு சாகசச் செயல் என்றே கூறுவேன்.
இந்த நற்சிந்தனை, நல் உணர்வு, நற் செயல்கள் இந்த இடத்தில் நடைபெறும்.
இந்த சிந்தனை, இந்த உணர்வு, இந்தச் செயல்பாடுகள் தொடர்ந்தால் இந்த மாணவர்கள் வித்தியாசமானவர்கள்.


அப்படி அந்த மாற்றம் இல்லங்களிலும் நடைபெற பெற்றோர்கள் இவர்களுடன் இணைய வேண்டும்.
எனக்குத் தலைவன் நானே என்று பொறுப்பேற்கும் குழந்தைகள் விரும்பும் பாதையைத் தேர்ந்தெடுக்கும் அந்த வாய்ப்பை அவர்களுக்கு பெற்றோர்கள் வழங்க வேண்டும்.
மாற்றம் பெற்ற அவர்களின் சிந்தனைப்போக்கு நடத்தை மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் தொடர, பெற்றோர்கள் தங்கள் இல்லச் சூழலை செம்மை இல்லச் சூழலாக மாற்றிட வேண்டும். இது பெற்றோர்களின் கடமையாகும்.
உங்கள் குழந்தைகள் மாறுகிறார்கள், அவர்களின் மூலம் உங்கள் குடும்பம் மாறுகிறது, உங்கள் குடும்பத்தின் மூலம் நீங்கள் வாழும் சமூகம் மாறுகிறது,
இப்படி இந்த உலக மாற்றம் நம்மிலிருந்து தொடங்குகிறது என்ற உணர்வில் நாம் சென்று மாற்றத்திற்காக குடும்பமாக மாற இது ஒரு நல்ல துவக்கம் எனக்கூறி மாணவர்களை வாழ்த்தி நிறைவு செய்தேன்.
இந்த நிகழ்வில் கடைசியாக உலக சமாதான அறக்கட்டளையின் தலைவர் குருமகான் ஆசியுரை கூறினார்.
அதனைத் தொடர்ந்து மாணவர்கள் பெற்றோர்கள் காலில் விழுந்து ஆசி வழங்கும் நிகழ்ச்சியுடன் பயிற்சி முகாம் நிறைவுற்றது.
இளைஞர்களுக்கு இப்படிப்பட்ட பயிற்சியினைக் கொடுத்தால் நாம் விரும்பும் சமூக மாற்றத்தை இளைஞர்கள் கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை பிறந்தது.

The post அடிப்படை மாற்றத்திற்கான பயிற்சி முகாம்! appeared first on Thaaii Magazine.

Please follow and like us:

You May Also Like

More From Author