திறமை வாய்ந்த வெளிநாட்டு ஊழியர்கள் அமெரிக்காவிலேயே தங்க ஏதுவாக, கோல்ட் கார்டு விசாவை ட்ரம்ப் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் சிறப்பு என்ன? இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
அமெரிக்காவிற்கு சென்று பணியாற்றுவதும், அங்கு நிரந்தரமாகக் குடியேறுவதும் வெளிநாட்டினர் பலரது கனவாக உள்ளது. அவ்வாறு அமெரிக்காவில் குடியேறிவிட்டால், கிரீன் கார்டு பெறுவது அவர்கள் அடுத்த இலக்காக மாறுகிறது. காரணம், கிரீன் கார்ட்டை ஒருவர் பெற்றுவிட்டால், அவர் அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ குடிமகனாக மாறிவிடுவார்.
அதன் மூலம், அமெரிக்க மக்களுக்குக் கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் அவர் பெற முடியும். ஆனால், அந்தக் கிரீன் கார்டை பெறுவதை மிகவும் கடினம். அதற்குப் பல்வேறு படிநிலைகள் உள்ளன. இந்தச் சூழலில்தான், வெளிநாட்டு பணியாளர்களையும், முதலீட்டாளர்களையும் தக்க வைக்கும் வகையில், தங்க அட்டை விசாவை ட்ரம்ப் கொண்டு வந்தார். அதன் விலை 5 மில்லியன் டாலர்களாக இருக்கும் எனவும் அறிவித்தார்.
இது இந்திய மதிப்பில், சுமார் 45 கோடி ரூபாயாகும். தங்க அட்டை விசாவின் விலை அதிகமாக உள்ளதாக விமர்சனம் எழவே, அதன் விலை குறைக்கப்பட்டது. அதன்படி, அந்த விசாவை பெற தனிநபர்கள் சுமார் 9 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் எனவும், கார்ப்பரேட் நிறுவனங்கள் சுமார் 18 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
பெருநிறுவனங்கள் தங்க அட்டை விசாவை வாங்கி தங்களது பணியாளருக்கு வழங்கலாம் எனவும், அந்த ஊழியர் குடியுரிமை பெற்றுவிட்டால், அதே அட்டையை வேறொரு ஊழியருக்கு ஒதுக்கலாம் எனவும் அமெரிக்க அரசு விளக்கம் அளித்தது. இந்நிலையில், வெள்ளை மாளிகையில் கோல்டு கார்டு விசா திட்டத்தை டிரம்ப் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், இந்தத் தங்க அட்டை விசா, கிரீன் கார்டு போன்றது எனவும், கிரீன் கார்டை காட்டிலும் அதிக பயன்களை இது வழங்கும் எனவும் தெரிவித்தார்.
“இந்தியா, சீனா போன்ற நாடுகளை சேர்ந்த திறமையான மாணவர்கள் ஹார்வர்ட், பென்சில்வேனியா, எம்ஐடி போன்ற பல்கலைக்கழகங்களில் பயில்கின்றனர். படிப்பு முடிந்ததும், அவர்கள் அனைவரும் சொந்த நாட்டிற்கே திரும்பிச் சென்றுவிடுகிறார்கள். இது மிகவும் அபத்தமானது மற்றும் அவமானகரமானது” என ட்ரம்ப் கூறினார்.
ஆனால், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கோல்ட் கார்டு விசா மூலம், அத்தகைய திறமையான மாணவர்கள் அமெரிக்காவிலேயே தக்கவைக்கபடுவார்கள் என அவர் விளக்கம் அளித்தார். இந்த விசாவால் பெறப்படும் தொகை அமெரிக்க கருவூலத்திற்கு சென்று சேரும் எனக் குறிப்பிட்ட ட்ரம்ப், அதன் மூலம் நாட்டு மக்களுக்குப் பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வர முடியும் எனத் தெரிவித்தார். அத்துடன், சிறந்த கல்வி நிறுவனங்களில் பயின்ற திறமையாளர்களை, கார்ப்பரேட் நிறுவனங்கள் பணியமர்த்தி கொள்ளவும் இந்த விசா உதவும் எனவும் கூறினார்.
அமெரிக்காவில் தேச பாதுகாப்புக்கு எதிராகச் செயல்பட்டாலோ, குற்ற சம்பவங்களில் ஈடுபட்டாலோ அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்பட்டுவிடும். கோல்டு கார்டு விசாவுக்கும் அந்த விதிமுறை பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அமெரிக்காவின் வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக், தனிநபர்களானாலும் சரி, கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களானாலும் சரி, திறமையானவர்களை தக்க வைக்க இந்தத் திட்டம் உதவும் எனக் கூறினார்.
கோல்ட் கார்டு விசா வைத்திருப்பவர்கள் 5 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களின் நன்னடத்தை அடிப்படையில் எளிதில் குடியுரிமை பெற முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். இதனிடையே, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் ஊழியர்கள் 270 நாட்களுக்கு தங்கும் வகையில் பிளாட்டினம் என்ற அட்டையை கொண்டு வர அமெரிக்கா திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
