சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தளுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில், மொத்தம் 4.87 கோடி வாக்குகள் பதிவாகியுள்ளன என்று இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மூலம் பதிவான வாக்குகளின் விவரம் வருமாறு..
பெண் வாக்காளர்கள் : 2.52 கோடி
ஆண் வாக்காளர்கள் : 2.35 கோடி
மூன்றாம் பாலினத்தவர் : 4,517 பேர்
மொத்தம் 75,064 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 85.10% வாக்குகள் பதிவாகியுள்ளன. இது தமிழ்நாட்டின் தேர்தல் வரலாற்றில் மிக உயர் வாக்குப்பதிவு சதவீதங்களில் ஒன்றாகும்.தேர்தல் ஆணையம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
மாநிலம் முழுவதும் 62 வாக்கு எண்ணும் மையங்களில் மே 4, 2026 அன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கும்.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். தபால் வாக்குகளை எண்ணி முடித்த பின்னரே, EVM இயந்திரங்களில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கும்.இந்தத் தேர்தலில் பெண் வாக்காளர்களின் பங்கேற்பு ஆண் வாக்காளர்களை விட அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மொத்த வாக்குகளில் பெண்களின் பங்களிப்பு சற்று அதிகமாக இருப்பது, தமிழ்நாட்டில் பெண்களின் அரசியல் விழிப்புணர்வு அதிகரித்துள்ளதை பிரதிபலிக்கிறது. தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு அமைதியாகவும், சுமூகமாகவும் நடைபெற்றதற்கு வாக்காளர்கள், அரசியல் கட்சிகள், பாதுகாப்புப் படையினர் மற்றும் தேர்தல் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது.மே 4ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணும் பணியை பாதுகாப்பாகவும், வெளிப்படையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
