மேற்கு வங்கம் தேர்தல் : காலை 9 மணி நிலவரப்படி 18.39% வாக்குப்பதிவு!

Estimated read time 1 min read

மேற்கு வங்கம் : சட்டமன்றத் தேர்தலின் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 29, 2026) காலை 7 மணி முதல் தொடங்கியுள்ளது. மாநிலத்தின் மொத்த 294 தொகுதிகளில் 142 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

கொல்கத்தாவில் உள்ள செயின்ட் மேரீஸ் சர்ச் பள்ளி கன்னியாஸ்திரிகள் உட்பட பலர் காலை முதலே வாக்குச்சாவடிகளுக்கு வருகை தந்து வாக்களித்தனர். காலை 9 மணி நிலவரப்படி, 18.39 % வாக்குகள் பதிவாகியுள்ளது. இரண்டாவது கட்டத்தில் போட்டியிடும் 1,448 வேட்பாளர்களில் 220 பேர் பெண்கள் ஆவர். மொத்தம் 41,001 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் 8,845 வாக்குச்சாவடிகள் முழுவதும் பெண்கள் நிர்வாகத்தில் இயங்குகின்றன. 39,301 முக்கிய வாக்குச்சாவடிகள் மற்றும் 1,700 துணை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 13 வாக்குச்சாவடிகள் மாற்றுத்திறனாளிகளால் நிர்வகிக்கப்படுகின்றன.

மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை சுமார் 3.21 கோடி ஆகும். இதில் ஆண்கள் 1.64 கோடியும், பெண்கள் 1.57 கோடியும், மூன்றாம் பாலினத்தவர் 792 பேரும் அடங்குவர்.பிரதமர் நரேந்திர மோடி, இரண்டாவது கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு மேற்கு வங்க மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், “இன்று மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அனைவரும் பெரும் எண்ணிக்கையில் வாக்களித்து, ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும். குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு, ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் (TMC) அணிக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இந்தக் கட்டம் தென் வங்காளம் மற்றும் கொல்கத்தா பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.

இது TMC அணியின் பாரம்பரிய வலிமை மிக்க பகுதியாகும். எனவே இந்தக் கட்ட வாக்குப்பதிவு தேர்தல் போக்கை தீர்மானிக்கும் “லிட்மஸ் டெஸ்ட்” என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.வாக்குப்பதிவு அமைதியாகவும், சுமூகமாகவும் நடைபெற தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அனைத்து 41,001 வாக்குச்சாவடிகளிலும் வெப்காஸ்டிங் வசதி செய்யப்பட்டுள்ளது.

முதல் கட்ட வாக்குப்பதிவில் சாதனை அளவிலான வாக்குப்பதிவு பதிவான நிலையில், இரண்டாவது கட்டத்திலும் உயர் வாக்குப்பதிவு எதிர்பார்க்கப்படுகிறது.தேர்தல் முடிவுகள் மே 4, 2026 அன்று தமிழ்நாடு, அசாம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுடன் சேர்த்து அறிவிக்கப்படும்.

Please follow and like us:

You May Also Like

More From Author