வங்கிகள் கோடிக்கணக்கில் கடன் பெற்று ஏமாற்றுபவர்கள் மீது மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பதாகவும், சாமானிய விவசாயிகளைச் சிறு தொகைக்காக அலைக்கழிப்பதாகவும் அடிக்கடி புகார்கள் எழுவதுண்டு. அந்த வகையில், கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் வெறும் 9 ரூபாய் 34 காசு பாக்கிக்காக விவசாயி ஒருவர் வங்கிக்குக் கொடுத்த பதிலடி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா பகுதியைச் சேர்ந்த விவசாயி சொக்கண்ண கவுடா, அங்குள்ள கனரா வங்கிக் கிளையில் ரூ. 50,000 விவசாயக் கடன் பெற்றிருந்தார். அந்தக் கடனை அவர் முழுமையாகத் திருப்பிச் செலுத்திவிட்ட நிலையிலும், சில மாதங்களுக்குப் பிறகு அவரது மொபைலுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், இன்னும் 9 ரூபாய் 34 காசு பாக்கி இருப்பதாகவும், அதைச் செலுத்தினால் மட்டுமே புதிய கடன் வழங்க முடியும் என்றும் வங்கித் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சிறு தொகைக்காக வங்கி தன்னை அலைக்கழிப்பதாக உணர்ந்த சொக்கண்ண கவுடா, நேராக வங்கிக்குச் சென்றார். அங்கு கவுண்டரில் ரூ.10 வழங்கி, தனது கணக்கில் இருந்த 9 ரூபாய் 34 காசு பாக்கியைச் செலுத்தினார். பணம் செலுத்தியதற்கான ரசீதில் “பாக்கித் தொகை செலுத்தப்பட்டது” எனப் பதிவானதும், வங்கி ஊழியர்களிடம் ஒரு அதிரடி கோரிக்கையை முன்வைத்தார்.
“வங்கி தனக்கு வரவேண்டிய ஒரு பைசாவைக் கூட விடாமல் வசூலிக்கும்போது, வாடிக்கையாளரான எனக்கும் மீதித் தொகையைக் கேட்க உரிமை உண்டு. எனவே, நான் கொடுத்த 10 ரூபாயில் மீதமுள்ள 66 காசுகளை என்னிடம் திருப்பிக் கொடுங்கள்” என அவர் வாதிட்டார்.
இது குறித்து ஊடகங்களிடம் பேசிய சொக்கண்ண கவுடா, “நான் கடந்த 20 ஆண்டுகளாக இந்த வங்கியின் வாடிக்கையாளர். ஒரு சில ரூபாய்களுக்காக விவசாயிகளைத் தொடர்பு கொண்டு நெருக்கடி கொடுக்கும் வங்கி நிர்வாகம், கோடிக்கணக்கில் மோசடி செய்துவிட்டுத் தப்பிப்பவர்களிடம் ஏன் இவ்வளவு கறாராக இருப்பதில்லை? இது பணத்திற்கானப் போராட்டம் அல்ல, சாமானிய மனிதனின் நீதிக்கானப் போராட்டம்” என்றார்.
விவசாயி ஒருபுறம் 66 காசுக்காகப் போராடும் இதே சூழலில், மகாராஷ்டிரா மற்றும் ஆந்திராவில் விவசாயிகளின் ஆவணங்களைத் தவறாகப் பயன்படுத்தி 212 போலி கணக்குகள் மூலம் ரூ. 152 கோடி வங்கி மோசடி நடந்துள்ளதாக அமலாக்கத்துறை அண்மையில் சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் கோடிகளில் மோசடி செய்பவர்கள் சுதந்திரமாக உலா வரும் நிலையில், ஒன்பது ரூபாய்க்காக ஒரு விவசாயியை வங்கி அலைக்கழித்த விதம் பொதுமக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
