மதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட மல்லை சத்யா, வரும் நவம்பர் 20-ஆம் தேதி அன்று தனது புதிய கட்சியைத் தொடங்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் பேரவையில் இந்த அறிவிப்பை வெளியிடப்போவதாகவும், இது ஓர் அரசியல் இயக்கமாக இருக்கும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகள் குறித்தும் அன்றைய தினம் அறிவிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த மல்லை சத்யாவுக்கும், பொதுச்செயலாளர் வைகோவுக்கும், முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் மோதல்களைத் தொடர்ந்து, அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
புதிய கட்சி தொடங்குவது குறித்துப் பேசிய மல்லை சத்யா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவைக் கடுமையாக விமர்சித்துள்ளார். “மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சரியான நேரத்தில் தவறான முடிவை எடுக்கும் தலைவராக இருந்தார்” என்று கூறிய அவர், குறிப்பாக 2016-ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத் தேர்தலின் போது அமைக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணி உருவானதில் “பல ரகசியங்கள் இருக்கின்றன” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், துரை வைகோவின் அரசியல் வருகை குறித்தும், அவர் கார்ப்பரேட் அரசியல்வாதியாகச் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த பரபரப்பான கருத்துகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பையும், விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
