தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் அபார வளர்ச்சி குறித்து சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ள கருத்துக்கள் தற்போது விவாதப்பொருளாக மாறியுள்ளன.
“நாங்கள் விஜயை குறைத்து மதிப்பிட்டுவிட்டோம்; அவர் குறிப்பிட்ட சதவீத வாக்குகளைப் பெறுவார் என்றுதான் நினைத்தோம், ஆனால் அது தற்போது இடங்களாகவும் (Seats) மாறிவிட்டது” என கார்த்தி சிதம்பரம் ஓப்பனாக ஒப்புக்கொண்டுள்ளார். தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே வேண்டாம் என்று நினைக்கும் ஒரு பெரிய ‘மார்க்கெட்’ இருப்பதாகவும், அதனை இதுவரை யாரும் சரியாகப் பயன்படுத்தாத நிலையில், விஜய் அதனை அறுவடை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, திராவிடக் கட்சிகள் மீது பற்று இல்லாத இளைஞர்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் அரசியலை கவனிக்கும் தலைமுறையினர் விஜய்யின் பின்னால் திரண்டிருப்பதே இந்த வெற்றிக்குக் காரணம் என்று அவர் தெரிவித்தார்.
