
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது, அந்த நாடு அணு ஆயுதங்களை வைத்திருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஈரான் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டு புதிய ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும், இல்லையெனில் அந்த நாடு முற்றிலும் அழிக்கப்படும் என்றும் அவர் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்தார்.
ஈரானின் அணு ஆயுதக் கொள்கை குறித்து அமெரிக்கா எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் நிலைப்பாடு குறித்தும் டிரம்ப் விளக்கமளித்தார். அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஒரு சுமுகமான ஒப்பந்தம் ஏற்படுவதை சீனா விரும்புவதாகவும், அணு ஆயுதம் இல்லாத ஈரானே சீனாவின் விருப்பம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சிக்கலைத் தீர்க்க தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக ஷி ஜின்பிங் தெரிவித்ததாகக் கூறிய டிரம்ப், ஈரானின் அணு ஆயுத முயற்சிக்கு எதிரான உலக நாடுகளின் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினார்.
