தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 18) மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.
முன்னதாக, கலைஞரின் நூற்றாண்டு நினைவையொட்டி தமிழக அரசு விடுத்த கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு நினைவு நாணயம் ரூ.100ஐ வெளியிட அனுமதி அளித்தது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதற்கு ஒப்புதல் அளித்த நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி ரூ.100 நாணயத்தை அச்சிட்டுள்ளது.
கலைஞரின் நினைவை போற்றும் வகையில் அவரது ‘தமிழ் வெல்லும்’ வாசகம் நாணயத்தில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், பல்வேறு கட்சியினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.