சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுடன் ஏப்ரல் 9ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் சந்திப்பு நடத்தினார்.
ஷி ச்சின்பிங் கூறுகையில், இவ்வாண்டு, சீன-ரஷிய தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவாகும். நெருக்கமான தொடர்பைத் தொடர்ந்து நிலைநிறுத்தி, சீன-ரஷிய உறவின் சீரான வளர்ச்சியை உத்தரவாதம் செய்ய நானும் அரசுத் தலைவர் விளாடிமிர் புதினும் ஒப்புக்கொண்டோம் என்றார்.
மேலும், சொந்த நாட்டின் நிலைமைக்குப் பொருந்திய வளர்ச்சிப் பாதையில் ரஷிய மக்கள் முன்னேறுவதையும், ரஷியா பயங்கரவாதத்தை ஒடுக்கி, சமூகத்தின் நிலைத்தன்மையைப் பேணிக்காப்பதையும் சீனா ஆதரிக்கிறது.
ரஷியாவுடன் இணைந்து, பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உள்ளிட்ட மேடைகளில் பலதரப்பு நெடுநோக்கு ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, உலக மேலாண்மை அமைப்பு முறையின் சீர்திருத்தத்தை முன்னேற்ற சீனா விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
லாவ்ரோவ் கூறுகையில், சீனா பெற்றுள்ள சாதனைகள், பிற நாடுகள் கூட்டு வளர்ச்சியை நனவாக்குவதற்கு முக்கிய வாய்ப்புகளை வழங்கியுள்ளன.
சீனாவுடன் இணைந்து, இரு நாட்டு அரசுத் தலைவர்கள் எட்டிய ஒத்த கருத்துகளைச் செவ்வனே செயல்படுத்தி, இரு தரப்பு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, மேலும் நேர்மையான மற்றும் நியாயமான சர்வதேச ஒழுங்கின் உருவாக்கத்துக்குப் பங்காற்ற ரஷியா விரும்புகிறது என்றார்.