பவானிசாகர் அணையின் நீர் மட்டம் நாளை 120 அடியை எட்டும் என்பதால், உபரி நீர் எந்த நேரத்திலும் பவானி ஆற்றில் திறக்கப்படலாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. அத்துடன் கடந்த 31ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் பவானிசாகர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பது நிறுத்தப்பட்ட நிலையில் , அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியதும் மீண்டும் பவானி ஆற்றில் உபரிநீர் திறந்துவிடப்படும் என்று கூறப்பட்டது.
நேற்று இரவு 8 மணியளவில் அணையின் நீர்மட்டம் 101.08 அடியாக உயர்ந்தது. அப்போது அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 758 கன அடி நீர் வந்துக்கொண்டிருக்கிறது. கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிகு 1000 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீர் மற்றும் பாசனத்திற்காக வினாடிக்கு 1,300 கன அடி நீரும் திறக்கப்பட்டது. இந்நிலையில், நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நாளை 120 அடியை எட்டும் என நீர்வளத்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 10 மணிக்கு 101.28 அடியை எட்டியுள்ளது. அணையின் நீர்வரத்து அதிகப்படியாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் நாளை (ஆக.4) 102 அடியை எட்டும் என்றும் அணையில் இருந்து உபரிநீர் பவானி ஆற்றில் எந்த நேரத்திலும் திறந்து விடப்படலாம் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
எனவே பவானி ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், அவர்களின் உயிர் மற்றும் உடமைகளின் பாதுகாப்புக்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
