குட் நியூஸ்..! முழு கட்டணத்தையும் திருப்பி வழங்கும் சிபிஎஸ்இ..!

Estimated read time 0 min read

சிபிஎஸ்இ மறுமதிப்பீட்டுக்காக விடைத்தாள்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைப் பெறுவதற்கான விண்ணப்பப் பதிவு இன்று தொடங்குகிறது.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான புதிய ஆன் ஸ்கிரீன் மார்க்கிங் எனப்படும் கணினித் திரை மதிப்பீட்டு முறையின் கீழ், மாணவர்களுக்குக் கட்டணத்தைத் திருப்பி வழங்கும் வசதியை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிதாக மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் மதிப்பீட்டு முறையில், எதிர்பார்த்ததை விடக் குறைவான மதிப்பெண்கள் வந்திருப்பதாக மாணவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிபிஎஸ்இ கூறுகையில், “மறுமதிப்பீட்டிற்குப் பிறகு மதிப்பெண்கள் அதிகரிக்கும் மாணவர்களுக்கு முழுப் பணமும் திருப்பித் தரப்படும். இது மதிப்பீட்டுச் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை, நேர்மையை உறுதி செய்யும்” என்று தெரிவித்துள்ளது.

இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் செயலாளர் சஞ்சய் குமார் மறுமதிப்பீட்டுக் கட்டணம் குறித்துப் பேசும்போது, “தங்கள் விடைத்தாள்களைப் பார்க்க விரும்பும் எந்தவொரு மாணவரிடமிருந்தும் ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படும்; அவர்கள் தங்கள் தாள்களைச் சரிபார்க்க விரும்பினால் தனியாக ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படும்; மேலும், ஏதேனும் குறிப்பிட்ட கேள்விக்கான விடையை மீண்டும் சரிபார்க்க ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

மறுமதிப்பீட்டு முறையானது, மதிப்பிடப்பட்ட விடைத்தாள்களை மதிப்பாய்வு செய்வதற்கு வெளிப்படையான மற்றும் கட்டமைக்கப்பட்ட செயல்முறையை மாணவர்களுக்கு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரிபார்ப்பு அல்லது மறுமதிப்பீட்டிற்கான கோரிக்கையைத் தொடங்குவதற்கு முன்பாக, மாணவர்கள் தங்கள் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைப் பெறுவதை இந்தச் செயல்முறை உறுதி செய்கிறது .

சரிபார்ப்பு மற்றும் மறுகூட்டல் செயல்முறைக்குப் பிறகு, பாட நிபுணர் குழு அதனை மதிப்பாய்வு செய்து இறுதி முடிவைத் தெரிவிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

விடைத்தாள்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைப் பெறுவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மே 19, 2026 அன்று தொடங்க உள்ளது. மாணவர்கள் இதற்கு மே 22 வரை விண்ணப்பிக்கலாம். சரிபார்ப்பு மற்றும் மறுமதிப்பீட்டிற்கான விண்ணப்பப் பதிவு மே 26 முதல் 29, 2026 வரை திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author