
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 108 இடங்களைக் கைப்பற்றி, முதல் தேர்தலிலேயே முதலமைச்சராகப் பதவியேற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் தவெக தலைவர் விஜய். 35 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், இந்த வெற்றியோடு திருப்தி அடையாத அவரது கவனம் இப்போது அடுத்து வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை நோக்கியே உள்ளது.
குறிப்பாக, சட்டமன்றத் தேர்தலில் தவெக-வால் ஒரு தொகுதியைக் கூடக் கைப்பற்ற முடியாத விழுப்புரம், திருவாரூர், நீலகிரி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களை முதல்வர் விஜய் தற்போது தனது முக்கிய இலக்காக மாற்றியுள்ளார்.
இந்த மாவட்டங்களில் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கான காரணங்கள் மற்றும் மக்கள் செல்வாக்கு குறைந்ததற்கான பின்னணி குறித்து விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு அந்தந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு அவர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மாநில அதிகாரம் மட்டுமின்றி, உள்ளாட்சி அமைப்புகளையும் கைப்பற்றினால் மட்டுமே தவெக-வின் ஆட்சி அதிகாரம் அடித்தட்டு மக்கள் வரை முழுமையாகச் சென்றடையும் என்று நம்பும் முதல்வர் விஜய், உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்தத் திட்டமிட்டு வருகிறார்.
பெண்களின் பாதுகாப்புக்கான அதிரடி நடவடிக்கைகள், மதுக்கடைகள் மூடல், 200 யூனிட் இலவச மின்சாரம் போன்ற தனது அரசின் ஆரம்பகாலச் சாதனைகள் உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தரும் என்று அவர் உறுதியாக நம்புகிறார்.
அதிமுக பிளவுபட்டிருப்பதும், திமுக தோல்வி அதிர்ச்சியில் இருப்பதும் தவெக-விற்குச் சாதகமாக இருந்தாலும், வெறும் சினிமா முகத்தை மட்டும் நம்பியிருக்காமல் கட்சி உள்கட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும் என்பதில் முதல்வர் தீவிரமாக இருக்கிறார்.
கோட்டையைத் தொடர்ந்து உள்ளூர் அமைப்புகளிலும் அதிகாரத்தைக் கைப்பற்ற விஜய் வகுத்துள்ள இந்த வியூகம், தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
