தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக முன்னாள் சென்னை காவல் ஆணையர் நியமனம்..!

Estimated read time 0 min read

தமிழக வெற்றிக் கழகம் புதிய ஆட்சி அமைத்ததில் இருந்து பல்வேறு ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகளை தொடர்ந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். அதேபோன்று காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புக்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சென்னை காவல் ஆணையராக இருந்த அருண் மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக ஏடிஜிபி அந்தஸ்தில் இருக்கும் அமல்ராஜ் சென்னை மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டார். அதேபோல் தமிழ்நாடு வடக்கு மண்டல ஐஜியாக இருந்த அசரா கார்க் தமிழ்நாடு உளவுத்துறை ஐஜியாக அதிரடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு முக்கிய ஏடிஜிபி, ஐஜி, டிஐஜி உள்ளிட்ட முக்கிய காவல்துறை அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த அருண் ஐபிஎஸ் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த அருண் மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக ஏடிஜிபி அமல்ராஜ் சென்னை மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டார். இதைதொடர்ந்து காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் ஐபிஎஸ் தற்போது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்” என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சென்னை காவல் ஆணையராக இருந்த அருண் ஐபிஎஸ் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பணியாற்றியுள்ளார். மேலும் சென்னை மாநகரில் கூடுதல் ஆணையராகவும் இணை ஆணைராகவும் பணியாற்றியுள்ளார. அதேபோல் மேலும் பல்வேறு மாவட்டங்களில் மண்டல ஐஜி ஆகவும் திருச்சி மாநகர காவல் ஆணையராக செயல்பட்டுள்ளார்.

இந்தநிலையில் கடந்த திமுக ஆட்சியில் சென்னை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேல் அந்த பணியில் இருந்த நிலையில் அவரை தேர்தல் நடைபெறும் நேரத்தில் தேர்தல் ஆணையம் மாற்றி காத்திருப்போர் பட்டியில் வைத்திருந்தது. இந்த நிலையில் தற்போது தமிழக அரசு அவரை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனராக நியமனம் செய்துள்ளது.

தற்போது அருண் ஐபிஎஸ்க்கு ஒதுக்கி இருக்கும் இந்த லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் என்ற பொறுப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவியாக காவல்துறை வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக இருந்த காவல்துறை அதிகாரிகள் டிஜிபி அந்தஸ்தில் இருந்தார்கள். ஆனால் தற்போது கூடுதல் டிஜிபி பொறுப்பில் இருக்கக்கூடிய அருணுக்கு லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதே போல் தேர்தல் நேரத்தில் நியமிக்கப்பட்ட சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி மகேஸ்வர தயாள் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சட்ட ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக அன்பு ஐபிஎஸ் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author