ஜூலை 15ம் தேதி எ.வ.வேலு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

Estimated read time 1 min read

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, சாலை ஊழல் வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராக ஜூலை 3-ம் தேதி சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வேறொரு நாளில் ஆஜராக அவகாசம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

கடந்த 2022-ம் ஆண்டு, ‘அறப்போர் இயக்கம்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் அளித்த புகாரின் அடிப்படையில், நெடுஞ்சாலைத்துறையில் சாலை அகலப்படுத்துதல், மேம்படுத்துதல் போன்ற பணிகளுக்காக ரூ.7 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் வழங்கப்பட்டும், பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்படாத நிலையில், ரூ.3.23 கோடி அரசு நிதி விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த ஜூன் 25-ம் தேதி எ.வ.வேலு மற்றும் அவருக்கு நெருங்கிய உதவியாளர் சங்கர் உள்ளிட்டோரின் 13-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில், ரூ.40 லட்சம் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலு, ரூ.7 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் ஊழல் செய்ததாக புகார்.

2022-ம் ஆண்டு மார்ச் மாதம், பணிகள் மேற்கொள்ளப்படாத நிலையிலும், ரூ.3.23 கோடி அரசு நிதி விடுவிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு.

குற்றவியல் சதி, மோசடி, அரசுப் பணம் கையாடல், போலி ஆவணங்கள் தயாரித்தல் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை, எ.வ.வேலுவுக்கு கடந்த (ஜூலை 3) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பியிருந்தது.ஆனால், அவர் தரப்பில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேரில் ஆஜராகுவதற்கு விலக்கு கோரியதாகவும், வேறு ஒரு நாளில் ஆஜராக அவகாசம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், வருகிற ஜூலை 15ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என எ.வ.வேலுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக வெளியிடப்பட்ட லுக் அவுட் நோட்டீசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடியாக இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கு உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் அவருக்கு எதிராக இந்த நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவு அவருக்குத் தற்காலிகமாகப் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், இந்த வழக்கில் இருந்து அவர் முழுமையாகத் தப்பிக்க முடியாதவாறு நீதிமன்றம் ஒரு முக்கிய நிபந்தனையையும் விதித்துள்ளது. அதன்படி, வரும் ஜூலை 15-ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) விசாரணைக்கு முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆஜராக வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.மேலும், தன் மீதான ஒட்டுமொத்த வழக்கையும் ரத்து செய்யக் கோரி எ.வ.வேலு தொடர்ந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்து வரும் ஜூலை 27-க்குள் விரிவான பதிலளிக்குமாறு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஆணை பிறப்பித்துள்ளது.

You May Also Like

More From Author