கேரள மாநில சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி அங்கு புதிய ஆட்சியை அமைத்துள்ளது.
கேரளாவின் புதிய முதலமைச்சராக வி.டி.சதீஷன் பதவியேற்றுள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாகப் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார். அதன் முக்கியப் பகுதியாக, வருகின்ற ஜூன் 15-ஆம் தேதி முதல் கேரளா முழுவதும் உள்ள அரசு பேருந்துகளில் பெண்கள் அனைவரும் கட்டணமின்றி இலவசமாகப் பயணிக்கலாம் என அம்மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த மகத்தான திட்டம் முதற்கட்டமாக அங்குள்ள நகரப் பேருந்துகளில் (Town Buses) முழுமையாகச் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணம் மட்டுமன்றி, சமூகத்தின் பல்வேறு தரப்பு மக்களையும் கவரும் விதமாகப் பல முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் வி.டி.சதீஷன் வெளியிட்டுள்ளார். குறிப்பாக, இந்தியாவிலேயே முதன்முறையாக வயதானவர்களின் நலன்களைப் பேணிக் காப்பதற்காகத் தனி அமைச்சகம் அல்லது தனித் துறை ஒன்று ஒதுக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
மேலும், அடிமட்ட அளவில் உழைக்கும் ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் பள்ளி சமையல் பணியாளர்களின் மாத ஊதியம் கணிசமாக உயர்த்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பதவியேற்ற சில நாட்களிலேயே புதிய முதலமைச்சர் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கைகள் கேரளா மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
