கோவை குண்டுவெடிப்பு தினத்தை முன்னிட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவையில் கடந்த 1998ம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதன் 26வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது. அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் தடுக்கும் விதமாக கோவை நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் 1800க்கும் மேற்பட்ட போலீசார் நகரின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெடிகுண்டு செயலிழக்க வைக்கும் 8 குழுக்கள் நகரின் முக்கிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இதனிடையே, மறக்க மாட்டோம் ! மன்னிக்க மாட்டோம் !! என்று கோவை குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு, பேரூர் நொய்யல் படித்துறையில் விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்பு சார்பில் மொட்டை அடித்து, திதி கொடுக்கப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது.
கோவையில் பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் அப்பாவி மக்கள் 58 பேர் பலியாகினர். குண்டுவெடிப்பில் பலியான அப்பாவி மக்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி இறந்தவர்களின் பெயர்கள் ஒவ்வொன்றாக வாசிக்கப்பட்டு, நொய்யல் படித்துறையில் திதி கொடுக்கப்பட்டது. விஸ்வ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் சிவலிங்கம் தலைமையில் திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து, நொய்யல் படித்துறையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு, ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் விஸ்வ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் சிவலிங்கம் கூறும்போது :- தொடர் குண்டுவெடிப்பில் பலியான ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்றும், இதுபோன்ற பயங்கரவாத செயல் இனி ஒருபோதும் நடக்கக்கூடாது என்று வருகின்ற தலைமுறைக்கு இதனை தெரியப்படுத்த வேண்டும் என்றும், இன்று மாலை 3:56 மணிக்கு ஆர்எஸ் புரம் பகுதியில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
எந்த இடத்திலே வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதோ, அந்த இடத்திலே நினைவு இடத்தையும் அமைக்க வேண்டும் என்றும், வரலாற்றை மறந்தால் அந்த நாடு முன்னேற முடியாது என்றும், இந்த பயங்கரவாத செயல்களில் பலியானவர்களுக்கு ஆர்.எஸ் புரம் பகுதியில் நினைவுத் தூண் அமைக்க வேண்டும் என்று கூறினார்.