வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump), மேரிலாந்தில் உள்ள ஜாயிண்ட் பேஸ் ஆண்ட்ரூஸ் (Joint Base Andrews) தளத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, 2028-ஆம் ஆண்டுக்கான அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது குறித்துத் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.
தான் மீண்டும் போட்டியிட விரும்பினாலும், அமெரிக்கச் சட்டங்கள் அதற்கு அனுமதிக்கவில்லை என்று டிரம்ப் வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “எல்லாரும் என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்கள், சட்டம் இதைப்பற்றி மிகத் தெளிவாகவும் கடுமையாகவும் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியும்… நான் போட்டியிட விரும்புவேன், ஆனால் சட்டம் மிகவும் வலுவானது (I’d love to run, but the law is very strong)” என்றார்.
தான் ஒஹியோவில் (Ohio) நடைபெற்ற ‘பேட்ரியாட் கேம்ஸ்’ (Patriot Games) நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதுகூட, அங்கிருந்த ஆதரவாளர்கள் “2028!” என்று முழக்கமிட்டு தன்னை மீண்டும் போட்டியிடச் வலியுறுத்தியதாக அவர் தெரிவித்தார். எல்லோரும் தன்னை மீண்டும் போட்டியிட விரும்புவதாகக் குறிப்பிட்ட அவர், ஆனாலும் அரசியலமைப்புச் சட்டம் அதற்கு வழிவகை செய்யவில்லை என்பதை மீண்டும் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் 22-வது திருத்தத்தின்படி, எவரும் இரண்டு முறைக்கு மேல் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட முடியாது. 2016 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ள டிரம்ப், தற்போது தனது இரண்டாவது பதவிக்காலத்தில் இருப்பதால், இச்சட்ட விதியின் காரணமாக அவரால் 2028 தேர்தலில் போட்டியிட இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.
