“இன்னைக்கும் என் அம்மா போட்டோவை பார்த்து டாட்டா சொல்வேன்” – இசையமைப்பாளர் இளையராஜா உருக்கமான பேட்டி….!! 

Estimated read time 0 min read

இசைஞானி இளையராஜா தனது தாயார் குறித்துப் பேட்டி ஒன்றில் மிகவும் உருக்கமாகப் பேசிய பழைய நினைவுகள், தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. என்றும் அழியாத தன் தாயின் பாசத்தைப் பற்றி அவர் பகிர்ந்து கொண்ட அந்தச் சம்பவம் அனைவரையும் கலங்கச் செய்துள்ளது.

​அந்தப் பேட்டியில் பேசிய இளையராஜா, “என்னுடைய பிள்ளைகள் பள்ளிக்குக் கிளம்பும்போது, ‘மம்மி டாட்டா, டாடி டாட்டா’ என்று சொல்லிவிட்டுச் செல்வார்கள். அதைப் பார்த்துக் கொண்டிருந்த என் அம்மா, மிகவும் அப்பாவியாக ‘அப்போ எனக்கு டாட்டா கிடையாதா?’ என்று என்னிடம் கேட்டார். அம்மாவின் அந்த வார்த்தை என் மனதை மிகவும் பாதித்தது. உடனே நான், ‘உனக்கு நான் சொல்றேன் அம்மா’ என்று கூறி, தினமும் வேலைக்குக் கிளம்பும்போது அவருக்குத் தவறாமல் டாட்டா சொல்லிவிட்டுத்தான் புறப்படுவேன்” என்று நினைவுகூர்ந்தார்.

​மேலும் தொடர்ந்த அவர், “இன்று என் தாய் இந்த உலகை விட்டு மறைந்துவிட்டாலும் கூட, அந்தப் பழக்கம் என்னிடம் மாறவே இல்லை. தினமும் நான் வேலைக்குக் கிளம்பும்போது, ஒரு நொடியாவது என் அம்மாவின் புகைப்படத்தைப் பார்த்து ‘டாய் அம்மா’ என்று டாட்டா சொல்லிவிட்டுத்தான் வீட்டை விட்டு வெளியே கிளம்புவேன்” என்று கண்ணீருடன் மனம்திறந்து பேசினார்.

​அன்னையின் மறைவுக்குப் பிறகும், தாய் மீது அவர் வைத்திருக்கும் அளவில்லாத அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தும் இந்த உருக்கமான பேட்டி, ரசிகர்களின் நெஞ்சங்களைத் தொட்டுள்ளது. இசைஞானியின் இந்தத் தாய் பாசத்தைக் கண்டு நெகிழ்ந்துபோன ரசிகர்கள், சமூக வலைதளங்களிலும் இணைய வழியிலும் இளையராஜாவின் இந்த அன்பான நிகழ்வைப் பகிர்ந்து தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

 

You May Also Like

More From Author