செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதை அவசரமாக நிறுத்துவதற்குத் தனியாக ஒரு பொத்தான் தேவையா என்ற விவாதம் எழுந்துள்ளது. இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார். தற்போதைய ஏஐ அமைப்புகள் மனிதர்களின் கண்காணிப்பில்தான் இயங்குகின்றன என்றும், அவை தாமாகவே கணினி வலைப்பின்னல்களைக் கைப்பற்றவோ, நிறுத்துவதைத் தடுக்கவோ முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏஐயை நிறுத்துவதற்கான ஒரே வழியாக அவசர நிறுத்தும் வசதியை நம்பியிருப்பதைவிட, அதன் செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணிப்பதும், வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகளை உருவாக்குவதும் முக்கியம் என பில் கேட்ஸ் வலியுறுத்தியுள்ளார். தற்போதைய சூழலில் ஏஐ தானாகவே கட்டுப்பாட்டை மீறுவதைவிட, அதைத் தவறான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் மனிதர்களால் ஏற்படும் ஆபத்துகளே உடனடிக் கவனம் செலுத்த வேண்டியவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏஐ தொழில்நுட்பம் மோசடிகள், இணையவழித் தாக்குதல்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளைச் சீர்குலைக்கும் செயல்களுக்கு உதவக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். முன்பு அரசுகளின் ஆதரவுடன் செயல்படும் குழுக்களால் மட்டுமே மேற்கொள்ள முடிந்த சில ஆபத்தான செயல்களுக்கு, தற்போது ஏஐ கருவிகள் மூலம் சிறிய குழுக்களும் உதவி பெறும் சூழல் உருவாகியுள்ளது. உயிரியல் ஆயுதங்கள் தொடர்பான வடிவமைப்பு மற்றும் இணையவழித் தாக்குதல்களுக்கு உதவி கோரிய சம்பவங்களையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏஐயின் தவறான பயன்பாட்டைத் தடுக்க நிறுவனங்களின் தன்னார்வ நடவடிக்கைகள் மட்டும் போதாது என்றும், அரசுகள் சட்டங்களை இயற்றி பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும் என்றும் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். தொழில்நுட்ப வல்லுநர்களுடன் இணைந்து அரசுகள் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புக்கான நடைமுறைகளை உருவாக்க வேண்டும் என்பதும் அவரது கருத்தாகும். அதே நேரத்தில், மருத்துவம், கல்வி, அறிவியல் ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் ஏஐ பல நன்மைகளை வழங்கும் ஆற்றல் கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, ஏஐயின் பயன்களைப் பயன்படுத்திக்கொண்டே, அதன் தவறான பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டங்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
