சீன மற்றும் ஈக்வடார் அரசுத்தலைவர்களின் பேச்சுவார்த்தை

 

சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங், ஆகஸ்ட் 18 அன்று பிற்பகலில் பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மாமண்டபத்தில் ஈக்வடார் அரசுத்தலைவர் விக்டர் நோபோவாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், இந்த ஆண்டானது சீனாவுக்கும் ஈக்வடாருக்கும் இடையிலான விரிவான நெடுநோக்குக் கூட்டாளி உறவு நிறுவப்பட்டதன் 10வது ஆண்டு நிறைவாகும். சர்வதேச சூழ்நிலையில் ஏற்படும் மாற்றங்களைப் பொருட்படுத்தாமல், சீனா எப்போதும் சீனா-ஈக்வடார் உறவுகளை நெடுநோக்கு மற்றும் நீண்டகால கண்ணோட்டத்தில் பார்த்து வருகிறது என்று தெரிவித்தார். மேலும், இரு நாட்டு மக்களுக்கும் சிறந்த முறையில் பயனளிக்கும் வகையில், இருதரப்பு உறவுகளைத் தொடர்ந்து புதிய நிலையைக் கொண்டு செல்ல ஈக்வடாருடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

விக்டர் நோபோவா கூறுகையில், சீனா, ஈக்வடாரின் ஒரு முக்கியமான கூட்டாளி மற்றும் நண்பர் ஆகும். ஈக்வடார், சீனாவுடன் பரஸ்பர அரசியல் நம்பிக்கையை ஆழப்படுத்தவும், இறையாண்மை மற்றும் உரிமைப் பிரதேச ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் சீனாவிற்கு ஆதரவளிக்கவும், தைவான் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாட்டை மதிக்கவும் தயாராக உள்ளது என்று தெரிவித்தார். மேலும், ஈக்வடார், சீனாவுடனான தனது ஒத்துழைப்புக்கு பெரும் முக்கியத்துவம் அளித்து வருகின்றது. வர்த்தகம், நிதி, சுரங்கம், தொடரவல்ல எரியாற்றல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பண்பாடு போன்ற துறைகளில் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், சீனாவுக்கான ஏற்றுமதியை விரிவுபடுத்தவும், மேலதிக சீன நிறுவனங்கள் ஈக்வடாரில் முதலீடு செய்து வணிகம் செய்ய வரவேற்கவும் விரும்புகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

தவிரவும், இப்பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இரு நாட்டுத் தலைவர்களின் முன்னிலையில், பசுமைத் தொழில்கள், வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், மற்றும் மக்களின் வாழ்வாதாரம் போன்ற துறைகளை உள்ளடக்கிய பல ஒத்துழைப்பு ஆவணங்கள் கையெழுத்திடப்பட்டன.

You May Also Like

More From Author