சென்னை அடுத்த கோவளத்தில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று காலை நடக்கிறது.
இதில் பங்கேற்க, தென் மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கவர்னர் கைலாஷ்நாதன் மற்றும் என்.ஆர்., காங்., கட்சியைச் சேர்ந்த முதல்வர் ரங்கசாமி பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. மாநாட்டில் கவர்னர் கைலாஷ்நாதன் பங்கேற்கும் சூழ்நிலையில், முதல்வர் ரங்கசாமி புறக்கணிக்க முடிவு செய்துள்ளார்.
தென் மாநில முதல்வர்கள் மாநாடு என்பதால், தமிழக முதல்வர் விஜய், கேரள முதல்வர் சதீசன், கர்நாடக முதல்வர் சிவகுமார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால், முதல்வரை மட்டும் அழைக்காமல், கூடவே மாநில நிர்வாகியாக உள்ள கவர்னரையும் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, கவர்னர் – முதல்வர் இடையே மோதலை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியில் சட்டசபை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் இருந்தாலும், கவர்னருக்கு தான் அதிகாரம். அவர் தான் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகி. அதன்படி தென் மாநில மாநாட்டில் பேச அழைக்கப்பட்டால், கவர்னருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். இரண்டாம் நபராகத் தான், அந்த விழாவில் முதல்வர் ரங்கசாமி நடத்தப்படுவார் என்ற கருத்து நிலவுகிறது.
இது மட்டுமின்றி, புதுச்சேரியின் ஒரே பிரச்னைகளை இருவருமே பேச வேண்டி இருக்கும்; இது, கவர்னருக்கும் தர்மசங்கடமாக இருக்கும் என்பதால், முதல்வர் ரங்கசாமி தென் மாநில முதல்வர்கள் மாநாட்டை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
