திறந்தவெளியில், மொட்டை மாடிகளில், விளையாட்டு திடல்களில் வண்ண வண்ண காத்தாடிகளை பறக்க விடுவது, தனித்துவமான அனுபவத்தை தரும்.
காலப்போக்கில் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல் சுவாரசியமான விளையாட்டாகவும் உலகம் முழுவதும் இது பரவியது.
சமீபத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தை கடற்கரையில் கோலாகலமாக நடைபெற்ற ஐந்தாவது சர்வதேச காத்தாடி திருவிழா, காண்போரை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தியது.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின விடுமுறையையொட்டி மூன்று நாட்கள் இவ்விழா கொண்டாடப்படுகிறது.
இவ்வாண்டு குளோபல் மீடியா நிறுவனம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இணைந்து நடத்திய இத்திருவிழாவில் தாய்லாந்து, மலேசியா, வியட்நாம், சிங்கப்பூர், இந்தோனேசியா மற்றும் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட சர்வதேச பட்டம் விடும் கலைஞர்கள் மற்றும் உள்ளூர் கலைஞர்கள் பங்கு பெற்றனர்.
பிரம்மாண்டமான மற்றும் வண்ணமயமான 250-க்கும் மேற்பட்ட விதவிதமான காத்தாடிகள் வானில் பறக்க விடப்பட்டன.
தமிழ்நாட்டின் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ஜல்லிக்கட்டுக் காளை, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, பொய்க்கால் குதிரை போன்ற காத்தாடிகள் இடம் பெற்றன.
சாதாரண காத்தாடிகள் போல் அல்லாது இவை கலைத்துவம் வாய்ந்தது என்பதால், ராட்சத வடிவில் பார்க்கும் போது பிரமிப்பு உணர்வை தருகிறது.
வெளிநாடுகளில் மட்டுமே நடைபெற்று வந்த இந்த விழாவினை நம்மூர் மக்களும் ரசிக்க வேண்டும் என்பதற்காக 5 வருடம் முன்பு இங்கு தொடங்கப்பட்டது.
ஆடி மாதத்தில் காற்று பலமாக வீசும் என்பதால், அதை கருத்தில் கொண்டே அந்த மாதத்தில் விழா நடத்தப்படுகிறது.
மேலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், காத்தாடி பறக்க விடும் குழு அமைத்து, விருப்பம் உள்ளவர்களுக்கு பயிற்சி அளித்து சர்வதேச அளவில் பங்கு பெறவும் செய்கின்றனர்.
பாராசூட்டிற்கு பயன்படுத்தப்படும் பொருட்களைக் கொண்டு தான் இவ்வகையான காத்தாடிகள் உருவாக்கப்படுகின்றன.
“கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்போம்” என்ற கருப்பொருளில் நடத்தப்பட்ட இந்த விழாவில் திமிங்கலங்கள், டால்பின்கள், ஷார்க் மீன்கள் ஆக்டோபஸ்கள் என பல்வேறு வகை கடல்வாழ் உயிரினங்கள் காத்தாடிகளாக உருப்பெற்றன.
குழந்தைகள் விரும்பும் மிக்கி மவுஸ், டெடி பியர் உள்ளிட்ட கார்ட்டூன் பொம்மைகளும் விண்ணில் பறந்தன.
சாதாரணமாக இவை 15 அடி முதல் 20 அடி நீளம் வரை இருக்கும். இவற்றை பறக்க வைக்க சிறப்பு தொழில்நுட்பம் கையாளப்படுகிறது. இந்த ராட்சத காத்தாடிகளை ஆங்கிலத்தில் ஷோ கைட்ஸ் என்று அழைக்கின்றனர்.
ஒவ்வொரு நாட்டின் கலாச்சார அடையாளமும், பிற நாடுகளில் உள்ள மக்களுக்கு இந்த காத்தாடிகள் வாயிலாக கொண்டு செல்லப்படுகிறது.
பொதுவாக காற்று வீசும் திறனை பொறுத்தே காத்தாடிகள் பறக்க விடப்படுகின்றன.
நிகழ்ச்சிகள் திட்டமிட்டு நடக்கும் தருவாயில் சில சமயம் காற்று வீசாமலும் போகக் கூடும்.
ஒவ்வொரு நாட்டிலும் இதற்கான காலம் மாறுபடுவதால், அதனை கணக்கிட்டு இத்திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன.
வானத்தில் மட்டும் அல்ல வாழ்விலும் வண்ணங்களைச் சேர்ப்போம் என்ற பொருளுடன் நடைபெற்ற இந்த நிகழ்வை, சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.
பார்வையாளர்களுக்கு இலவச அனுமதியும் வழங்கப்பட்டது.
வருடந்தோறும் இவ்விழாவினை கண்டு களிப்பவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்வதாக கூறப்படுகிறது.
விழாவையொட்டி கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
சூழலியலை கருத்தில் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தத் திருவிழா, காண்போர் வியக்கும் வண்ணம் கோலாகலமாக நடைபெற்றது.
இன்றைய டிஜிட்டல் உலகில் சிறுவர்கள் மொபைல் மற்றும் கணினி திரைகளில் முடங்கி கிடக்கும் வேளையில், காத்தாடி விடுதல் போன்ற பாரம்பரிய பொழுதுபோக்குகள் இயற்கையோடு இணையவும் நண்பர்களுடன் பழகவும் உதவுகின்றன.
மாஞ்சா நூல்களைத் தவிர்த்து பாதுகாப்பான முறையில் காத்தாடி பறக்க விடுவது, நம் வாழ்நாளின் மறக்க முடியாத சிறு வயது நினைவுகளாக மாறும் என்பதில் ஐயமில்லை.
S. வாணி



#காத்தாடி #விளையாட்டுதிடல் #மாமல்லபுரம் #திருவிடந்தை #கடற்கரை #ஜல்லிக்கட்டு #காளை #தஞ்சாவூர் #தலையாட்டிபொம்மை #பொய்க்கால்குதிரை #சர்வதேசகாத்தாடிதிருவிழா #internationalkitefestival #mamallapuram #kitefestival #kite #festival #காத்தாடி #காத்தாடிதிருவிழா
The post காண்போரைக் கவர்ந்த காத்தாடித் திருவிழா! appeared first on Thaaii Magazine.
