பிரபல பாலிவுட் இயக்குநர் குகு கோலி மாரடைப்பால் காலமானார்..!!

Estimated read time 1 min read

பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் இயக்குநரான குகு கோலி (77) மாரடைப்பு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் இன்று (ஆக.26) காலமானார். பிரபல நடிகர் அஜய் தேவ்கனின் அறிமுக படமான ‘பூல் அவுர் காந்தே’மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், ‘சுஹாக்’, ‘ஹகீகத்’, ‘அனாரி நம்பர் ஒன்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.

அவதார் கோலி என்ற இயற்பெயர் கொண்ட குகு கோலிக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மும்பையிலுள்ள கோகிலாபென் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டு உடல்நிலை சீராகி வந்த நிலையில், மீண்டும் ஏற்பட்ட தீவிர மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. பாலிவுட்டின் முன்னணி இயக்குநரான ராஜ் கபூரிடம் உதவி இயக்குநராக தனது திரைவாழ்க்கையைத் தொடங்கிய குகு கோலி, ‘போபி’, ‘பேதாப்’, ‘அர்ஜுன்’ போன்ற படங்களில் பணியாற்றினார்.

1991-ஆம் ஆண்டு வெளியான ‘ஃபூல் அவ்ர் காண்டே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இத்திரைப்படத்தின் மூலமே பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் திரையுலகில் அறிமுகமானார். முதல் படத்திலேயே மாபெரும் வெற்றி கண்ட குகு கோலி, தொடர்ந்து ‘சுஹாக்’, ‘ஹகீகத்’, ‘கோஹ்ராம்’, ‘அனாடி நம்பர் 1’, ‘யே தில் ஆஷிகானா’ போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். 2004-ஆம் ஆண்டு வெளியான ‘வோ தேரா நாம் தா’ என்பதே இவர் இயக்கிய கடைசி திரைப்படமாகும்.

குகு கோலி 1990-ஆம் ஆண்டு பிரபல மூத்த நடிகை அருணா இரானியை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு முதல் மனைவி ரீட்டா கோலி மூலம் பூஜா, கரிஷ்மா என்ற இரு மகள்கள் உள்ளனர். மும்பை ஓஷிவாரா மயானத்தில் நடைபெறும் இவரது இறுதிச்சடங்கில் ரோஹித் ஷெட்டி, விக்கி கௌஷல், கத்ரீனா கைஃப், ஜாவேத் அக்தர், ஷபானா ஆஸ்மி உள்ளிட்ட பல முன்னணி திரையுலக பிரபலங்கள் நேரில் பங்கேற்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

You May Also Like

More From Author