டிசம்பர் 16ம் தேதி வங்கதேசம் திரும்பும் ஷேக் ஹசீனா; தனது பாஸ்போர்டை வழங்க வேண்டுகோள்

Estimated read time 1 min read

வரும் டிசம்பர் 16ம் தேதி வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தாயகம் திரும்பத் திட்டமிட்டுள்ளதாக அவரின் செய்தித் தொடர்பாளர் சையத் மொசம்மல் அலி தெரிவித்துள்ளார். இந்தியாவில் தஞ்சமடைந்த பிறகு, தாயகம் திரும்புவதற்கான ஒரு குறிப்பிட்ட தேதியை ஷேக் ஹசீனா அறிவிப்பது இதுவே முதல் முறையாகும்.

அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானிடமிருந்து வங்கதேசம் விடுதலை பெற்ற ‘வெற்றி தினத்தை’ முன்னிட்டு, வரும் டிசம்பர் 16ம் தேதி டாக்கா திரும்புவதற்கு விரும்புவதாக அவரது செய்தி தொடர்பாளர் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாகவே ஷேக் ஹசீனா நாடு கடத்தப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், ‘வெற்றி தின’த்தன்று அவர் மீண்டும் நாடு திரும்புவதற்கு வசதி செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பு வங்க தேச அரசுக்கு உண்டு என்று கூறியுள்ளார்.

டெல்லியிலிருந்து டாக்காவுக்குத் தன்னை அழைத்துச் செல்ல வங்கதேசத்தின் அரசு விமான நிறுவனமான Biman Bangladesh Airlines விமானத்தை ஏற்பாடு செய்யுமாறும், ரத்து செய்யப்பட்ட தனது பாஸ்போர்ட் மற்றும் பயண ஆவணங்களை மீண்டும் வழங்குமாறும் வங்கதேச அரசை ஷேக் ஹசீனா கேட்டுக்கொண்டுள்ளார்.

வங்கதேச நீதிமன்றத்தில் தானாக முன்வந்து சரணடையவும், வழக்கை எதிர்கொள்ளவும் தயாராக இருப்பதாகவும், அதற்காகக் கைது செய்யப்படவோ தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்கொள்ளவோ கூடத் தயாராக இருப்பதாகவும் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த ஆண்டு நவம்பரில் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக ஷேக் ஹசீனாவுக்கு வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது.

கடந்த நவம்பர் 9ம் தேதி லண்டனை சேர்ந்த தனது சட்ட வல்லுனர்கள் மூலம் டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகத்தில் புதிய பாஸ்போர்ட் மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்க விண்ணப்பம் செய்திருந்தார்.

ஆனால், ஷேக் ஹசீனாவின் கோரிக்கையை ஏற்க வங்கதேச அரசு மறுத்து விட்டது.

இதனையடுத்து இப்போது ஷேக் ஹசீனாவின் நாடு திரும்பும் அறிவிப்புக்கு எந்த அதிகாரப்பூர்வ பதிலையும் வங்க தேச அரசு இதுவரை அளிக்கவில்லை.

ஏற்கெனவே நாடு கடத்தல் நடைமுறைகள் மூலமாக மட்டுமே அவரை இந்தியாவில் இருந்து அழைத்து வர முடியும் என்றும், நாடு திரும்பினால் அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுவார் என்றும் அந்நாட்டு வெளியுறவுத் துறை இணையமைச்சர் ஹுமாயூன் கபீர் தெரிவித்திருந்தார்.

டிசம்பர் 16ம் தேதி ஷேக் ஹசீனாவுக்கு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அது வங்க தேசம் உருவான நாளாகும். மேலும் விடுதலையை முன்னின்று நடத்திய அவரது தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான், அந்நாட்டின் தேசத் தந்தை என்றும் போற்றப்படுகிறார்.

Please follow and like us:

You May Also Like

More From Author