பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Estimated read time 1 min read

பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்காக இந்தியாவுக்குச் சீன அதிபர் ஜி ஜின்பிங் வருவதற்கு முன்னதாக சீனாவுடனான வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் கட்டுப்பாடுகள் குறித்து பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

2020-ல் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு மோதலையடுத்து சீனா மீது கடுமையான கட்டுப்பாடுகளை இந்தியா விதித்தது.

பிறகு புவிசார் அரசியல் நெருக்கடி காரணமாகவும் நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்காகவும் அந்தக் கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டுள்ளன.

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் இறுதிப் பொருட்களைத் தயாரிக்கப் பயன்படும் மூலதனப் பொருட்களே சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாக கடந்த பிப்ரவரியில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாதா நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து கடந்த மார்ச்சில் கொண்டுவரப்பட்ட புதிய அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையின் மூலம் சீனப் பங்குகளைக் கொண்ட நிறுவனங்கள் இந்தியாவில் 10 சதவீதம் வரை முதலீடு செய்வதற்கான கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப் பட்டன. இதன் மூலம் 4,895 கோடிக்கும் அதிகமான முதலீட்டு முன்மொழிவுகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக அதே மாதம் கேமரூனில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்கள் மாநாட்டின் போது, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், சீன வர்த்தக அமைச்சர் வாங் வென்டாவோவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத் தக்கது.

சீனாவிலிருந்து 21 வகையான முக்கியமான மின் உபகரணங்களை அடுத்த 5 ஆண்டுகளுக்கு இறக்குமதி செய்ய BHEL நிறுவனதுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

கடந்த ஜூன் மாதத்தில் சீனாவுடன் தொடர்புடைய TBEA எனர்ஜி, நான்ஜிங் எலக்ட்ரிக் இந்தியா, நியூ நார்த்ஈஸ்ட் எலக்ட்ரிக் இந்தியா மற்றும் டாய்காய் எலக்ட்ரிக் இந்தியா ஆகிய 4 மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு அரசு டெண்டர்களில் பங்கேற்க 2 ஆண்டு விலக்கு அளிக்கப்பட்டது.

இதன் விளைவாக ஏப்ரல்-ஜூன் மாதங்களில் சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி, கடந்த ஆண்டை விட 28 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்து 5.55 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் இருதரப்பு வர்த்தக முதலீட்டு உறவுகளை மேம்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகச் செயலாளர் ராஜேஷ் அகர்வாலைச் சந்தித்த சீனத் தூதர் ஸு ஃபெய்ஹாங், இருதரப்பு வர்த்தகம் தொடர்பாக பேசியதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சீன சுங்கத்துறை மற்றும் அந்நாட்டு அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடுகளால், முக்கியமான தொழில்நுட்பங்கள் மற்றும் உதிரிபாகங்களை இறக்குமதி செய்வதில் இந்திய நிறுவனங்கள் சந்திக்கும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து சீன பிரதிநிதிகளுடன் மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் விநியோகச் சங்கிலி அபாயங்களைக் குறைக்க இந்தியா முயற்சியெடுத்துள்ளது.

மேலும் இருதரப்பு வர்த்தகத்தில் பரஸ்பர சமநிலையை உருவாக்குவது மற்றும் இந்திய நிறுவனங்களுக்கான வர்த்தகத் தடைகளை நீக்குவது குறித்து விவாதிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியத் தொழில்துறை பிரதிநிதிகள் அளிக்கும் இந்த முக்கியத் தரவுகள் மற்றும் புகார்களின் அடிப்படையில், பிரிக்ஸ் மாநாட்டின் போது சீன தரப்பிடம் தொழில்நுட்ப ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துமாறு இந்தியா வலியுறுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது

You May Also Like

More From Author