நீண்ட தூர இரவு பயணத்தை சவுகரியமாக மாற்றும் வகையில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குளிரூட்டப்பட்ட 16 பெட்டிகளைக் கொண்ட இந்த ரெயிலில் 11 மூன்றாம் வகுப்பு படுக்கை பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு படுக்கை பெட்டிகள் மற்றும் ஒரு முதல் வகுப்பு பெட்டி இடம்பெற்றுள்ளன.
இரவு நேரப் பயணத்தில் தூக்கத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மென்மையான படுக்கைகள், மேல்படுக்கைக்கு எளிதாக செல்லும் வசதி மற்றும் இரவு நேரத்துக்கு ஏற்ற மென்மையான ஒளி அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், ரெயிலின் பெட்டிகள் ஒருங்கிணைந்த ரெயில் தொகுப்பாக செயல்படுவதால் பயணத்தின் போது அதிர்வும் சத்தமும் குறைந்து அமைதியான பயண சூழல் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெயிலுக்குள் தூசி, வெளிப்புற சத்தம் மற்றும் வெப்பநிலை மாற்றத்தை குறைக்கும் வகையில் மூடப்பட்ட நடைபாதை மற்றும் தானியங்கி கதவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கழிப்பறைகளில் விமான தரத்திலான உயிரியல் கழிவறை அமைப்பு இடம்பெற்றுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக கழிப்பறையும், முதல் வகுப்பு பெட்டியில் சூடுநீர் குளியல் வசதியும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
பயணிகளின் பாதுகாப்புக்காக காட்சித் திரைகளுடன் கூடிய தகவல் அறிவிப்பு அமைப்பு, சிசிடிவி கண்காணிப்பு மற்றும் அவசர நேரத்தில் ஓட்டுநருடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதி உள்ளிட்ட அம்சங்களும் உள்ளன. ஒவ்வொரு பயணிக்கும் தனிப்பட்ட சார்ஜிங் வசதி, மடிக்கக்கூடிய சிற்றுண்டி மேசை போன்ற வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்திய ரெயில்வே ஆவணங்களிலும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில்களுக்கு மேம்படுத்தப்பட்ட விபத்து பாதுகாப்பு, நவீன வசதிகள் மற்றும் விமான பாணியிலான கழிப்பறை அமைப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
