சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அமெரிக்காவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இப்பயணத்தின் போது அவர், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற வரவேற்பு விழாவில் உரை நிகழ்த்துகையில், இப்பயணத்தின் போது தனக்கும் தன் மனைவிக்கும் சிறப்பான உபசரிப்பை வழங்கிய அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்புக்கும் அவர்தம் துணைவியாருக்கும் மனமார்ந்த நன்றி தெரிவித்தார்.
உலகளாவிய மாபெரும் மாற்றங்களை எதிர்நோக்கியுள்ள, பெரிய நாடுகளான சீனாவும் அமெரிக்காவும், மனிதகுலத்தின் வளர்ச்சியை முன்னேற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை எனக் குறிப்பிட்ட ஷிச்சின்பிங், இவ்வாண்டு அரசுத் தலைவர் டிரம்பு சீனாவில் பயணம் மேற்கொண்ட போது, சீன-அமெரிக்க ஆக்கப்பூர்வ நெடுநோக்கு நிதான உறவை உருவாக்க முன்வந்ததை இருவரும் ஒருமனதாக ஒப்புக் கொண்டதாகவும், அது, இரு நாட்டு மக்களாலும், சர்வதேச சமூகத்தாலலும் பரந்த முறையில் வரவேற்கப்பட்டது என்றார். மேலும், டிரம்புடன் இணைந்து சீன-அமெரிக்க உறவின் வளர்ச்சியை முன்னேற்ற விரும்புவதாகவும் ஷிச்சின்பிங் கூறினார்.
இரு நாடுகளும் ஒன்றுக்கு ஒன்று மதிப்பளித்து, அடிக்கடி பரிமாற்றம் மேற்கொள்ள வேண்டும். உளமார்ந்த ஒத்துழைப்பு மேற்கொள்ள வேண்டும். அமெரிக்கத் தொழில் நிறுவனங்கள் சீனாவில் தொழில் புரிவதைச் சீனா விரும்புவதோடு, அமெரிக்கா, சீனத் தொழில் நிறுவனங்களை நியாயமான முறையில் நடத்தி, கூட்டாக பிரச்சினைகளைக் கையாள வேண்டும். நாம் சமாதான சக வாழ்வு மேற்கொள்ள வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையிலான போட்டியானது, ஆரோக்கியமான முறையில் மேற்கொண்டு, எல்லைகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். சீனத் தேசத்தின் மகத்தான மறுமலர்ச்சியை நனவாக்குவதும், அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக்குவதும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதில்லை என்பதோடு, இரு நாடுகள் கையோடு கைகோர்த்து, மேலும் எழில் மிக்க உலகத்தை உருவாக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.
