சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள தசாங்ஷான் தீவில் கடந்த ஏப்ரல் மாதம் காயங்களுடன் மீட்கப்பட்ட 5 கடல் நாய்களில் ‘நானா’ என்ற 2 வயது புள்ளி கடல் நாயும் ஒன்று. அங்குள்ள ஆராய்ச்சியாளர்கள் மற்றும் உள்ளூர் மக்களால் பல மாதங்கள் மிகுந்த அன்போடு பராமரிக்கப்பட்ட இந்த கடல் நாய், முழுமையாகக் குணமடைந்ததைத் தொடர்ந்து கடந்த 7-ஆம் தேதி ஆழ்கடலில் மறுவாழ்விற்காக விடுவிக்கப்பட்டது.
ஆனால், மனிதர்களின் பாசத்திற்குப் பழகிப்போன ‘நானா’, ஆழ்கடலில் வாழ விரும்பாமல் மனிதர்களைத் தேடி மீண்டும் பயணம் தொடங்கியது. சுமார் 6 நாட்கள் தொடர்ந்து நீந்தி, கடந்த 13-ஆம் தேதி சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து மீண்டும் அதே தசாங்ஷான் தீவின் கரைக்கே வந்து சேர்ந்தது. அதன் உடலில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் (GPS) கண்காணிப்புக் கருவி மூலம், அது 200 கி.மீ தூரம் நீந்தி வந்ததை ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தினர்.
நீண்ட தூரப் பயணத்தால் மிகவும் இளைத்துக் காணப்பட்ட அந்தப் புள்ளி கடல் நாயைக் கண்ட உள்ளூர் மீனவர்களும் ஆராய்ச்சியாளர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்து, அதற்கு உணவளித்து மீண்டும் அரவணைத்துக் கொண்டனர். சீனாவில் முதல் தர பாதுகாக்கப்பட்ட உயிரினங்களின் பட்டியலில் இருக்கும் இந்த புள்ளி கடல் நாயின் பாசப் போராட்டம் மற்றும் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி உலகெங்கிலும் உள்ள விலங்கு பிரியர்களைப் பெரிதும் நெகிழச் செய்துள்ளது.
