14 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பு ஆபத்து ? IRDAI-ன் புதிய முடிவுக்கு எதிர்ப்பு குரல்!

Estimated read time 1 min read

காப்பீட்டு விநியோக முறையில் IRDAI முன்மொழிந்துள்ள புதிய சீர்திருத்தங்கள் பாலிசிதாரர்களை பாதிப்பதுடன், வேலைவாய்ப்புகளை குறைத்து, காப்பீட்டுத் துறையின் வளர்ச்சியையும் பாதிக்கும் என இந்திய காப்பீட்டு புரோக்கர்கள் சங்கம் (IBAI) தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உரிமம் பெற்றுள்ள 798 காப்பீட்டு புரோக்கர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் IBAI, செப்டம்பர் 23, 2026 அன்று IRDAI வெளியிட்ட காப்பீட்டு விநியோக சீர்திருத்தங்கள் தொடர்பான ஆலோசனை அறிக்கைக்கு கவலை தெரிவித்துள்ளது.

பாலிசிதாரர் பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை, தவறான விற்பனையைத் தடுப்பது உள்ளிட்ட IRDAI-ன் நோக்கங்களுக்கு IBAI ஆதரவு தெரிவித்துள்ளது. கடனுடன் கட்டாயமாக காப்பீட்டை இணைப்பதைத் தடை செய்வது, பாலிசிக்கு ஏற்ற விற்பனை நடைமுறைகள், தவறான விற்பனை நிரூபிக்கப்பட்டால் கமிஷனை திரும்பப் பெறுவது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் IBAI வரவேற்றுள்ளது.

ஆனால், 30-க்கும் மேற்பட்ட கமிஷன் உச்சவரம்புகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் மொத்த செலவு வரம்பை மூன்றில் ஒரு பங்கு குறைக்கும் திட்டம் கவலைக்குரியது என IBAI தெரிவித்துள்ளது.

பாலிசிதாரர்கள் நேரடியாக காப்பீட்டு நிறுவனத்திடம் பாலிசி வாங்க முடியும் என்றாலும், பெரும்பாலானோர் காப்பீட்டு புரோக்கர்களைத் தேர்வு செய்கின்றனர். வாடிக்கையாளரின் நலனுக்காக செயல்பட சட்டப்பூர்வமாக கட்டுப்பட்டுள்ள புரோக்கர்கள், காப்பீட்டு பாதுகாப்பை பேசி முடிவு செய்தல், பல்வேறு நிறுவனங்களின் திட்டங்களை ஒப்பிடுதல் மற்றும் கிளெயிம்களில் உதவுதல் போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர் என IBAI தெரிவித்துள்ளது.

“IRDAI-ன் சொந்த தரவுகளின்படி, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுக்கு எதிரான புகார்களில் 69 சதவீதம் கிளெயிம்கள் தொடர்பானவை. அவற்றில் 63 சதவீத புகார்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதகமாக முடிவடைகின்றன. வாடிக்கையாளருக்காக செயல்படும் முக்கிய இடைத்தரகரை பலவீனப்படுத்துவது பாலிசிதாரர்களின் நலனுக்கு உதவாது” என IBAI செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், 2023 சீர்திருத்தத்திற்குப் பிறகு பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் மொத்த நிர்வாகச் செலவு பிரீமியத்தில் 28.2 சதவீதத்திலிருந்து 26.5 சதவீதமாக குறைந்துள்ளதாக IBAI சுட்டிக்காட்டியுள்ளது. கமிஷன் அதிகரித்ததாகத் தோன்றுவதற்கு, ஏற்கனவே இருந்த சில செலவுகள் வேறு பிரிவுகளிலிருந்து கமிஷன் பிரிவுக்கு மாற்றப்பட்டதும் ஒரு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 27.18 லட்சம் Point-of-Sale நபர்களில் 14.81 லட்சம் பேருக்கு காப்பீட்டு புரோக்கர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் சிறிய நகரங்களில் சுயதொழில் செய்பவர்கள். புதிய கமிஷன் உச்சவரம்புகள் சேவைச் செலவுக்கு கீழ் சென்றால் இவர்களின் வேலைவாய்ப்பு முதலில் பாதிக்கப்படும் என்றும், காப்பீட்டு நிறுவனங்களின் செலவு வரம்பு மூன்றில் ஒரு பங்கு குறைக்கப்பட்டால் நிறுவனங்களுக்குள் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையும் குறையக்கூடும் என்றும் IBAI தெரிவித்துள்ளது.

உலகின் 20 மிகப்பெரிய Non-Life Insurance சந்தைகளில் 18 நாடுகளில் Commercial Insurance கமிஷன்களுக்கு உச்சவரம்பு இல்லை என்றும் IBAI தெரிவித்துள்ளது. புதிய முன்மொழிவுகள் தாக்க மதிப்பீடு (Impact Assessment) இன்றி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட கட்டமைப்பை மாற்றுவதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்து, 2023-ம் ஆண்டு நடைமுறையைத் தொடர வேண்டும், கட்டாயத் தேர்வு உள்ள விற்பனைப் பிரிவுகளுக்கு மட்டும் கமிஷன் உச்சவரம்புகளை வரையறுக்க வேண்டும், குறைந்த கிளெயிம் விகிதம் உள்ள பிரிவுகளில் வாடிக்கையாளர்களுக்கு பிரீமியம் திருப்பித் தரும் நடைமுறையை கொண்டுவர வேண்டும், Commercial Insurance பிரிவுகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் மற்றும் புதிய விதிகளை உருவாக்குவதற்கு முன் Impact Assessment வெளியிட வேண்டும் என IRDAI-யிடம் IBAI வலியுறுத்த உள்ளது.

IBAI தனது விரிவான பதிலை அக்டோபர் 25ஆம் தேதிக்குள் IRDAI-யிடம் சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

You May Also Like

More From Author