கிரீன்லாந்தில் சுமார் 1,000 சுறா மீன்களை வேட்டையாடத் தீட்டப்பட்ட திட்டம் தற்போது இடைக்காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விவகாரம் மனித வாழ்வாதாரத்திற்கும் இயற்கை பாதுகாப்பிற்கும் இடையிலான பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ஒருபுறம், மீன்பிடி வலைகள் மற்றும் விலைமதிப்பற்ற கருவிகளைப் பாதுகாக்கவும், தங்களது அன்றாட வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக்கொள்ளவும் மீனவர்கள் இந்தச் சுறாக்களை அழிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மறுபுறம், அறிவியலாளர்களும் இயற்கை பாதுகாப்பு அமைப்புகளும் இந்த முடிவுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த சுறாக்கள் பூமியில் மிகவும் மெதுவாகப் பெருகக்கூடிய அரிய வகை உயிரினங்கள் என்பதால் அவை அழியும் ஆபத்து உள்ளதாக எச்சரிக்கின்றனர்.
இயற்கையிலேயே சுமார் 400 ஆண்டுகள் வரை வாழக்கூடிய ஆயுட்காலம் கொண்ட இந்த கிரீன்லாந்து சுறாக்கள், இனப்பெருக்கம் செய்து தங்களது எண்ணிகையை உயர்த்திக் கொள்ளவே நூற்றுக்கணக்கான ஆண்டுகள் எடுத்துக்கொள்கின்றன.
இந்நிலையில், மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுவதற்காக, பல நூறு ஆண்டுகள் வாழும் இந்த அரிய சுறாக்களைக் கொல்வது சரியான தீர்வாகுமா என்ற கேள்வி உலகம் முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
