நீர்வளத்துறையில் ரூ.42 கோடி டெண்டர் முறைகேடு புகார்; உயர்நீதிமன்றம் கெடு

Estimated read time 0 min read

தமிழக நீர்வளத்துறையில் 42 கோடி ரூபாய் டெண்டர் ஒதுக்கீடு முறைகேடு புகார் மனுவை 3 வார காலத்திற்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி நீர்வளத்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கம் ஏரியின் நீர்த்தேக்க பகுதிகளை சீரமைக்க நீர்வளத்துறை சார்பில் 42 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கான டெண்டர் அறிவிக்கப்பட்டது.

இதில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி பி.டி. ஆஷா முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரருக்கு ஏற்கனவே ஒரு பணி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற பணிகளுக்கான தொழில்நுட்பத் தகுதிச் சுற்றில் மனுதாரர் தேர்ச்சி பெறாததால் அவை மற்றவர்களுக்கு ஒதுக்கப்பட்டதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது மனுதாரர் தரப்பில், நீர்வளத்துறை செயலாளரிடம் தாங்கள் அளித்த புகார் மனுவை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, மனுதாரர் அளித்த புகார் மனுவை, நீர்வளத்துறை செயலாளர் சட்ட விதிகளுக்குட்பட்டு பரிசீலித்து, 3 வாரங்களுக்குள் தகுந்த உத்தரவை பிறப்பிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

You May Also Like

More From Author