சென்னை : தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (நவம்பர் 28) முதல் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி வரையிலான அடுத்த ஒரு வார காலத்திற்கான வானிலை முன்னறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று கடலோர, தென் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று நீலகிரி, கோயம்புத்தூர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, இராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடிய பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
அதே நேரத்தில் திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
நாளை (நவம்பர் 29) நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டிய மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவும்.
தொடர்ந்து நவம்பர் 30-ஆம் தேதியன்று வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்; ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவக்கூடும்.
