
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே பெங்களூரு எம். சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஐந்தாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி மழையின் காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. இதனால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இருப்பினும், இந்த ஆட்டத்தில் இளம் இந்திய ஆல்ரவுண்டர் நமன் தீர் தன் அதிரடி ஆட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
மழை காரணமாக போட்டி 9 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட நிலையில், களமிறங்கிய நமன் தீர் வெறும் 6 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 24 ரன்களைக் குவித்து மிரட்டினார். அவரது இந்த அதிரடிப் ஆட்டத்தில் 3 சிக்சர்களும், 1 பவுண்டரியும் அடங்கும். இதன் மூலம் அவர் 400.00 என்ற அசாத்திய ஸ்ட்ரைக் ரேட்டை பதிவு செய்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்களான யுவராஜ் சிங் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரின் சாதனைகளைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
இன்னிங்ஸின் 7-வது ஓவரில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அவுட்டாகி வெளியேறியதும் களமிறங்கிய நமன் தீர், தான் எதிர்கொண்ட முதல் 3 பந்துகளிலேயே 16 ரன்களை விளாசினார். டி20 கிரிக்கெட் வரலாட்டில் இந்திய பேட்ஸ்மேன் ஒருவர் தனது இன்னிங்ஸின் முதல் 3 பந்துகளில் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 2018-ல் தினேஷ் கார்த்திக் பங்களாதேஷுக்கு எதிராக இதே சாதனையைச் செய்திருந்தார்.
டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்தபட்சம் 5 பந்துகளுக்கு மேல் எதிர்கொண்டு 400 என்ற நம்பமுடியாத ஸ்ட்ரைக் ரேட்டுடன் இன்னிங்ஸை நிறைவு செய்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை நமன் தீர் பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு 2007 டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக யுவராஜ் சிங் 362.5 ஸ்ட்ரைக் ரேட்டிலும் (16 பந்துகளில் 58 ரன்கள்), 2018 நிதாஹாஸ் கோப்பையில் தினேஷ் கார்த்திக் 362.5 ஸ்ட்ரைக் ரேட்டிலும் (8 பந்துகளில் 29 ரன்கள்) ரன் குவித்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அந்தச் சாதனைகளை நமன் தீர் முறியடித்துள்ளார்.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பந்துகளை எதிர்கொண்ட இந்திய வீரர்களின் வரிசையில், 2022-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 500.00 ஸ்ட்ரைக் ரேட்டில் (2 பந்துகளில் 10 ரன்கள்) விளையாடிய தினேஷ் கார்த்திக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார் நமன் தீர். இந்த அதிரடி இன்னிங்ஸ் மூலம் அவர் இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.
