உலகை ஆச்சரியப்பட வைத்த ஜோடி…! “ஒரே பெயரால் மலர்ந்த காதல், திருமணம்”… யாரு கூப்பிட்டாலும் ரெண்டு பேரும் ஒண்ணாவே திரும்பி பார்ப்பாங்க… விசித்திரமான சுவாரஸ்யம்…! 

Estimated read time 1 min read

சீனாவில் நடைபெற்ற ஒரு திருமணம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. பொதுவாகத் திருமணங்களில் மணமக்களின் உடைகள், அலங்காரங்கள் மற்றும் சடங்குகள்தான் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். ஆனால், இந்தத் திருமணத்தில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது மணமகன் மற்றும் மணமகளின் பெயர்தான். இருவரின் பெயரும் உச்சரிப்பில் மட்டுமல்லாமல், சீன மொழியின் எழுத்துக்களிலும் முற்றிலும் ஒன்றாக இருப்பதுதான் இதில் உள்ள மிகப்பெரிய சிறப்பு.

அதாவது சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் கடந்த அக்டோபர் 6-ம் தேதி 33 வயதுடைய ஜு சியாஓச்சொங் மற்றும் 28 வயதுடைய ஜு சியாஓச்சொங் ஆகிய இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணப் பத்திரிகையில் இருவரின் பெயரும் ஒரே மாதிரி அச்சிடப்பட்டிருப்பதைக் கண்ட உறவினர்கள் பலரும், இது அச்சுப் பிழை என்றுதான் முதலில் நினைத்துள்ளனர். ஆனால், இது தவறு அல்ல, இருவரின் வாழ்க்கையிலும் நடந்த ஒரு அழகான தற்செயல் நிகழ்வு ஆகும்.

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம் ஒன்றில்தான் இவர்கள் இருவரும் முதன்முறையாகச் சந்தித்துள்ளனர். நேர்காணல் நடத்துபவர் ‘ஜு சியாஓச்சொங்’ என்று அழைத்தபோது, ஒரே நேரத்தில் இருவர் எழுந்து நின்றதும், இருவரும் ஒரே வேலைக்காக அங்கு வந்திருந்ததும் சுவாரசியமான திருப்பத்தை ஏற்படுத்தியது. பின்னர், பொதுவான நண்பர் ஒருவர் மூலம் இவர்களுக்கு அறிமுகம் ஏற்பட்டு, அதுவே நாளடைவில் காதலாக மாறி, 2019-ல் டேட்டிங் செய்யத் தொடங்கிய இவர்கள் தற்போது திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளனர்.

ஒரே பெயரைக் கொண்டிருப்பது கேட்கும்போதே சுவாரசியமாக இருந்தாலும், நிஜ வாழ்க்கையில் இதனால் பல வேடிக்கையான மற்றும் குழப்பமான தருணங்களும் ஏற்பட்டுள்ளன. திருமணப் பதிவு மற்றும் வீட்டு ஆவணங்களைச் சரிபார்க்கும்போது, கணினி மென்பொருள் ஒரே பெயராக இருந்ததால் தானாகத் தரவுகளை ஏற்கவில்லை. இதனால் ஊழியர்கள் ஆவணங்களை நேரடியாகக் கையேடு முறையில் சரிபார்க்க வேண்டியதாகிவிட்டது.

மேலும், ஒருமுறை விமானப் பயணம் மேற்கொண்டபோது, இருவரின் பெயரும் ஒரே மாதிரி இருந்ததாலும், பாலின விவரம் அதில் தெளிவாகத் தெரியாததாலும் தவறுதலாக ஒருவருடைய போர்டிங் பாஸை மற்றொருவர் எடுத்துவிட்டனர். இதனால் விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகளால் சில மணி நேரம் தீவிர சோதனைக்குப் பிறகே அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். நண்பர்கள் இவர்களை அழைக்கும்போது இருவருமே ஒரே நேரத்தில் திரும்புவதால், குழப்பத்தைத் தவிர்க்கக் கணவனை ‘தா சொங்’ என்றும், மனைவியை ‘சியாஓ சொங்’ என்றும் செல்லமாக அழைக்கத் தொடங்கினர்.

இந்த விசித்திரமான மற்றும் அழகான காதல் ஜோடியின் கதை தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, நெட்டிசன்கள் பலரும் இவர்களுக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author