நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சுப்மன் கில் தலைமையில் விளையாடி வரும் குஜராத் டைட்டன்ஸ் அணியானது இதுவரை தாங்கள் விளையாடியுள்ள 11 லீக் ஆட்டங்களில் 8 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. குஜராத் மற்றும் பெங்களூரு ஆகிய இரு அணிகளும் 16 புள்ளிகளை பெற்றிருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணி நிகழ்த்திய சாதனை :
ஐபிஎல் தொடரில் தாங்கள் அறிமுகமான ஆண்டே கோப்பையை கைப்பற்றி அசத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி அதற்கு அடுத்த ஆண்டு இறுதிப்போட்டி வரை சென்றது. கடந்த சீசன் மட்டுமே அவர்களுக்கு சுமாராக அமைந்த நிலையில் மீண்டும் நடப்பு 2025 தொடர் அவர்களுக்கு மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.
குறிப்பாக சுப்மன் கில் தலைமையில் பேட்ஸ்மேன்கள் அற்புதமாக செயல்பட்டு வரும் வேளையில் பந்துவீச்சாளர்களும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். குஜராத் அணியில் பவுலர்கள், பேட்ஸ்மேன்கள் என இரு தரப்புமே மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவது அந்த அணியின் வெற்றி வாய்ப்பை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் குஜராத் அணியின் டாப் 3 வீரர்கள் ஐபிஎல் வரலாற்றில் ஒரு முக்கியமான சாதனை ஒன்றினை முதல் முறையாக நிகழ்த்தியுள்ளனர். அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் இந்த தொடரில் குஜராத் அணியின் டாப் 3 வீரர்களாக சுப்மன் கில், சாய் சுதர்சன் மற்றும் ஜாஸ் பட்லர் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.
இவர்கள் மூவருமே இந்த தொடரில் இதுவரை தங்கள் விளையாடியுள்ள 11 இன்னிங்ஸ்களில் 500 ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர். குறிப்பாக சுப்மன் கில் 11 இன்னிங்ஸ்களில் 508 ரன்களையும், சாய் சுதர்சன் 509 ரன்களையும், ஜாஸ் பட்லர் 500 ரன்களையும் குவித்துள்ளனர். இதன்மூலம் ஒரு அணியின் டாப் 3 வீரர்கள் ஒரே ஐபிஎல் தொடரில் 500 ரன்களுக்கு மேல் அடிப்பது இதுவே முதல் முறையாக பதிவாகியுள்ளது.
இந்த தொடரில் எஞ்சியுள்ள மூன்று லீக் ஆட்டங்களில் குஜராத் அணியானது டெல்லி, லக்னோ மற்றும் சென்னை ஆகிய அணிகளை எதிர்கொள்ள உள்ளது. இந்த மூன்று போட்டியில் ஒரு வெற்றி பெற்றால் கூட அந்த அணி டாப் 2 இடங்களுக்குள் சென்று இறுதிப்போட்டிக்கு செல்ல அதிக வாய்ப்பு கிடைத்துள்ளது.